Breaking News

வவுனியாவில் பொது இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவம் அகற்றப்படவேண்டும்

வவுனியாவில் பொது இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் அகற்றப்படவேண்டும் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் விசேட பிரேரரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.

வடமாகாணசபை அமர்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றபோதே அமைச்சர் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் முன்வைத்துள்ள பிரேரணை வருமாறு,வவுனியா மாவட்டத்தில் பொது இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவம் மற்றும் காவற்துறையினரை அகற்றுவது தொடர்பான பிரேரணையை இந்த உயரிய சபைக்கு விசேடமானதும் அவசரமானதுமான பிரேரணையாக முன்வைத்து சபையின் மேலான அனுமதியை தயவுடன் கோரிநிற்கின்றேன்.

வடக்கில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் பொது இடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவமும், காவற்துறையினரும் படிப்படியாக விலகிவரும் நிலையில் குறிப்பிட்ட பொது இடங்களில் இன்னும் இராணுவமும், காவற்துறையினரும் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இதன் விளைவாக கடந்த 18ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் அடப்பங்குளத்தில் பொது கட்டிடத்தில் நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமிற்கு அருகிலுள்ள பகுதியில் வேப்பிலை பறிக்கச்சென்ற 55 வயதான குடும்பப்பெண் அதிரடிப்படையினர் பாதுகாப்பு வேலிக்கு பாய்ச்சியுள்ள சட்டவிரோத மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கமநலசேவைகள் நிலையம், நெற்களஞ்சியம், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் போன்ற பொதுமக்களுக்கான சேவை வழங்குகின்ற நிலையங்களை உள்ளடக்கி விசேட அதிரடிப்படையினரால் இந்த முகாம் யுத்தகாலத்தின்போது அமைக்கப்பட்டிருந்தது.பொது இடங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் இராணுவம் மற்றும் காவற்துறையினர் நிலைகொண்டிருப்பது தொடர்பில் கடந்த காலங்களில் பலதடவைகள் அவர்களை வெளியேற்றுவது தொடர்பில் முயற்சிகள் மேற்கொண்டும் குறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்தும் அவர்கள் நிலைகொண்டிருப்பதானது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதும் மக்களின் சுதந்திரமானதும் அச்சமின்றியதுமான நடமாட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இவ்வாறாக இராணுவமும், காவற்துறையினரும் நிலைகொண்டிருக்கும் பொது இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென இந்த உயரிய சபையில் தீரமானம் நிறைவேற்றப்படவேண்டுமென கோருகின்றேன்.குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் இராணுவமும், காவற்துறையினரும் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள இடங்களின் விபரம் வருமாறு.

வவுனியா பிரதேச செயலக பிரிவு

குடியிருப்பு கலாசார மண்டபம் -இராணுவம்
பூங்காவீதி நெற்சந்தைப்படுத்தும் சபை-விசேட அதிரபடை
பம்பைமடு கமநலசேவைகள் நிலையம், கூட்டுறவுச்சங்கம், தபாலகம், பிரதேச சபையின் உபஅலுவலகம், வனபரிபாலன திணைக்களம்
கூட்டுறவு பயிற்சிநிலையம், பூந்தோட்டம்.
ஓமந்தை காவல்நிலையம் (தனியார் காணி).
இராணுவ பாதுகாப்பு அரண்-ஓமந்தை பிரதேச வைத்தியசாலை வளாகம்
பேயாடிகூளாங்குளம் பாசாலை,பிரதேச சபை உபஅலுவலகம்.
மூன்றுமுறிப்பு கூட்டுறவுச்சங்கம்,கிராம அபிவிருத்திச்சங்கம்.-இராணுவ பல்பொருள் அங்காடி
தேக்கந்தோட்டம், கண்டிவீதி வனபரிபாலன திணைக்களம்

செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவு

அடப்பங்குளம் கமநலசேவைநிலையம்-விசேட அதிரடிப்படை
மாங்குளம் வைத்தியசாலை பழைய கட்டிடம் -காவற்துறை
தந்திரிமலை சந்தி முகாம் (குளம்)-இராணுவம்
பிரதேச சபை சந்தை காணி
உலுக்குளம் கமநலசேவைநிலையம்
குருக்களுர்விசேட அதிரடிப்படை முகாம்- தனியார்காணி
பெரியகட்டு அரசவிடுதி- இராணுவமுகாம்

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு

கனகராயன்குளம் நீர்பாசனத்திணைக்கள கட்டிடம்
கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம்;-காவற்துறை
நெடுங்கெணி கிராமிய வைத்தியசாலை-இராணுவ சிற்றுண்டிசாலை
மாறாவிலுப்பை இராணுவமுகாம்- தனியார்காணி
இராமனூர் விசேட அதிரடிப்படை முகாம்- தனியார்காணி
கனகராயன்குளம் 561 பிரிகேட் ற்கு முன்னால் உள்ளகாணி தனியார்காணி
மருதோடை இராணுவ விளையாட்டுமைதானம் -தனியார்காணி
நெடுங்கேணி காவல்துறை நிலையம் – தனியார்காணி
ஒலுமடு 2ம் கட்டை இராணுவ முகாம், இராணுவப் பண்ணை – தனியார் காணி
புளியங்குளம் பொது விளையாட்டுமைதானம் – காவல்துறை விளையாட்டுமைதானம்