40,000 பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்பதை நிரூபிக்க விசாரணை தேவை
அதேபோல் எம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க கட்டாயம் ஒரு விசாரணை பொறிமுறை அவசியமானதாகும். ஆனால் இந்த விசாரணையின் போது எமக்கு சாதகமான ஆலோசனைகள் அமையுமானால் மாத்திரமே சர்வதேச உதவிகளை நாடமுடியும் என அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக் ஷவே கலப்பு நீதிமன்ற கலாசாரத்தை இலங்கைக்குள் அனுமதித்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விவகாரமே இப்போது அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இறுதி முடிவு இம்மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. ஆனால் இது இலங்கை தொடர்பில் வெளிவரும் முதல் அறிக்கை அல்ல. இதற்கு முன்னரும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆகவே இதை நாம் பாரிய அச்சுறுத்தலான ஒரு விடயமாக கருத வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் சர்வதேச அழுத்தங்கள் தொடர்ச்சியாக ஏற்படவும் சில காரணிகள் உள்ளன. அதாவது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளே இலங்கை மீது அழுத்தங்கள் ஏற்படக் காரணமாகும். அதாவது நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல் மற்றும் காணாமல்போனோரை கண்டறியும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.
அதேபோல் கலப்பு நீதிமன்ற முறைமை தொடர்பில் குறிப்பிடுகின்றனர். இலங்கைக்கு கலப்பு நீதிமன்ற முறைமையானது புதிதல்ல. மஹிந்த ராஜபக் ஷவே முதலில் இந்த கலப்பு நீதிமன்ற முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்தினார். மஹிந்த ராஜபக் ஷவே இலங்கையில் பிரித்தானிய நீதிபதிகளின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.
புலிகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்
அதேபோல் எமது இராணுவத்தை சர்வதேச மட்டத்திலும் உள்ளக பொறிமுறைகளிலும் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இராணுவ குற்றச்சாட்டுகள் தொடர்பில் இராணுவ வீரர்களை விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவத்தை தண்டிக்கும் வகையில் இராணுவத்தின் மீது இலங்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோல் இலங்கை இராணுவத்தையோ அல்லது குறிப்பிட்ட நபர்களையோ தண்டிக்கும் உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இல்லை. அதேபோல் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது யுத்தக் குற்றங்கள் நடந்தேறியுள்ளன என இராணுவத்தை விசாரிப்பதைப்போல் விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டும். விடுதலைப்புலிகள் இன்று இல்லையே, முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு அவர்களை விசாரிப்பது என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்குழுவை அழித்திருந்தாலும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் உள்ளனர். பிரபாகரன், பொட்டு அம்மான் கொல்லப்பட்டாலும் அவர்களுக்கு நிதி உதவி, ஆயுத உதவிகளை வழங்கிய நபர்களை விசாரித்து அவர்களையும் நீதிமன்றில் நிறுத்தவேண்டும். அவர்களும் இந்த சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். இவர்கள் தொடர்பில் நேரடியான அழுத்தங்கள் இல்லாவிடினும் மறைமுகமாக இவர்கள் மீது அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே புலிகளில் இருந்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவிப்பவர்கள் உண்மையில் இந்தப் பிரச்சினை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இலங்கையை அச்சுறுத்தலான நாடாக மாற்றியது யார்? ஆயுத கலாசாரத்தின் மூலம் நாட்டில் மூவின மக்களையும் கொன்று குவித்தது யார்? யுத்தக் குற்றம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது? மனித உரிமைகள் மீறல்களை மேற்கொண்டது யார்? இந்த கேள்விகளுக்கு ஒரே பதிலாக விடுதலைப்புலிகளையே குறிப்பிட முடியும். எனினும் எமது இராணுவத்தினரே இந்த செயற்பாடுகளில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றினர். அதேபோல் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையும் கூட ஒரு பக்கம் சார்ந்ததாகவே அமைந்துள்ளது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.
விசாரணை அவசியமானது
மேலும் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் கட்டாயம் ஒரு விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும். இலங்கை இராணுவத்தின் மீதும், எமது நாட்டின் மீதும் ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை நிவர்த்தி செய்யவேண்டும். இலங்கையில் உண்மையிலேயே நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த குற்றச்சாட்டுகளை கண்டறியவும் உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தவும் விசாரணை ஒன்று நடந்தாகவேண்டும். எந்த உண்மைகளையும் மூடி மறைக்கக்கூடாது என்பதில் எமது அரசாங்கம் தெளிவாக உள்ளது.
ஆனால் இந்த விசாரணைகள் முழுமையாக இலங்கையின் தலையீட்டில் நடக்கவேண்டும். எந்தவொரு பக்கச்சார்பான தலையீடுகளையும் அனுமதிக்காது சுயாதீன உள்ளகப் பொறிமுறைகளின் மூலம் கையாளவேண்டும். அதேபோல் சர்வதேச தலையீடு வேண்டாம் என்ற நிலைப்பாடும் இல்லை. விசாரணைகள் நடைபெறவேண்டும், இராணுவம் பாதுகாக்கப்பட வேண்டும், உள்ளக பொறிமுறையை முழுமையாக நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும், விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக நிரூபிக்க வேண்டும்,
இந்த செயற்பாடுகளை பலப்படுத்த சர்வதேசம் உதவுமாயின் அதற்கு சர்வதேசத்தின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள நாம் தயார். அவ்வாறு இல்லாது புலிகளின் குரலாய் சர்வதேசம் செயற்படுமாயின் ஒருபோதும் எந்தவொரு சர்வதேச தலையீட்டுக்கும் அனுமதிக்க மாட்டோம். எமது அரசாங்கத்தின் நிலைப்பாடும் அதுவேயாகும். அதேபோல் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் என்ன தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கையில் என்ன செய்வது என்பதை இலங்கையின் பாராளுமன்றத்தின் மூலமே தீர்மானிக்க வேண்டும். ஆகவே என்ன செய்வது என்பது தொடர்பில் நாமே இறுதி தீர்மானம் எடுப்போம் என்றார்.








