ஐ.நா அறிக்கை குற்றவியல் விசாரணைக்குரியதல்ல! இலங்கை அரசு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை ஒரு குற்றவியல் விசாரணை அறிக்கையல்ல என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இந்த அறிக்கை இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் திகதியின் பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தில் இலங்கையின் மனித உரிமை, சட்டம் – நீதி, நல்லாட்சி, சட்ட சீர்த்திருத்தம் மற்றும் நல்லிணக்கம் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் கரிசனை செலுத்தப்பட்டு வருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக பேச்சு நடத்தப்படும் என்பதோடு, அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆகியோருடனும் பேச்சுகள் நடத்தப்படும்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படாது என்பதுடன், பொறிமுறைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகள், நல்லிணக்கம், நீதியைக் கிடைக்கச்செய்யும் வழிமுறை, நீண்டகால மற்றும் அர்த்தபுஷ்டியான சமாதானம், சம உரிமைகளை அனைத்து இன மக்களுக்கும் கிடைக்கச் செய்தல் போன்ற விடயங்கள் குறித்து பேச்சு நடத்தப்படும்.
இதேவேளை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை மனித உரிமை மீறல் மீதான விசாரணையை வலியுறுத்தும் அறிக்கையே தவிர குற்றவியல் விசாரணை அறிக்கையல்ல. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பரிந்துரைகள் புதிய பொறிமுறையில் உள்வாங்கப்படும்.
அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் அவரது அலுவலகத்துடன்இணைந்து அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று அனைத்து இன மக்களினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்.
இதற்கமைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளையும், வழிகாட்டல்களையும் புதிய பாதைக்கான சிறந்த சந்தர்ப்பம் என்று கருத்திற்கொள்ளப்படும் உத்தரவாதத்தை அளிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த விசாரணை அறிக்கை போர்க் குற்றம் சார்ந்ததல்ல என்ற விடயத்தை அழுத்தமான தெரிவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் பதில் அறிக்கை அமைவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.