Breaking News

அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய இலங்கை அரசு கடும் முயற்சி!

எதிர்வரும் 30 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமை பேரவையில் அமெரிக்க தலைமையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை நீர்த்து ப்போகச் செய்ய இலங்கை அரசு கடும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது.

இது குறித்து தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் உத்தியோகப்பற்ற கலந்துரையாடல்களில் இலங்கை தனது நேச நாடுகளின் உதவியுடன் கடுமையான இராஜதந்திர பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பகரமானத் தரப்புக்களிடமிருந்து  தகவல்கள் கிடைத்துள்ளன.

சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இதுவிடயத்தில் ஸ்ரீலங்காவிற்குச் ஆதரவாகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும், குறிப்பாக விசாரணைகளில் சர்வதேச தலையீட்டினை முற்றாக அகற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சிக்கு முழு ஆதரவினை வழங்குவதாகவும் தெரியவருகிறது.

ஆனாலும், நோர்வே, அயர்லாந்து, கனடா, சுவீடன், லேச்சன் ஸ்ரைன், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவின் முதலாவது தீர்மான வரைபினை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனக் குரல் கொடுத்து வருகின்றன என உயர்மட்ட இராஜீய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு கிழக்கில் முற்றாகப் படைவிலகல், அபகரிக்கப்பட்ட காணிகளை மீளக் கையளித்தல், சாட்சியங்களின் பாதுகாப்பு மற்றும் விசேட கலப்பு நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்களை உத்தேச தீர்மானத்திலிருந்து முழுமையாக நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா அரசு வலியுறுத்தி வருகின்றதாக தெரியவருகிறது.

அத்துடன், உள்ளூர் விசாரணைப் பொறிமுறையூடாகவே மனித உரிமை மீறல் சம்பவங்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் வலியுறுத்திவருகிறது. ஆனாலும், அமெரிக்கா தலைமையிலான தீர்மானத்தில், ஐ.நா விசாரணை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட கலப்பு நீதிமன்றம் என்ற பதம் உள்ளக்கடக்கப்படாத போதிலும், விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உட்பட பிரதிநிதிகளின் பங்களிப்பு இருக்கவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது.

எனினும் ஒருபுறம் அமெரிக்காவும், மறுபுறம் இலங்கைவும் முன்வைக்கும் யோசனைகள் நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் அனைத்துத்தரப்பினரும் இணங்கக்கூடிய ஒரு தீர்விற்கு வர முடியும் என மேற்குலக நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் அனைத்துத் தரப்பினரும் இணங்கக்கூடிய ஒரு இடம் என்பது சர்வதேச பங்களிப:புடனான நீதிமன்ற விசாரணையை அகற்றியதா என கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மீண்டும்துரோகம் இழைத்துவிடக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.