காணாமல் போனோர் தொடர்பான 2வது அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கை விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் கையளிக்கப்படவுள்ளதாக, ஆணை க்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் போன்றவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையே இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கையை தயாரிக்கும் போது காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆலோசகர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதன்படி காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையையும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கவுள்ளனர்.
மேலும் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க ஜனாதிபதியிடம் தினம் ஒன்றை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், விரைவில் அதனை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
இதேவேளை இந்த வருடத்துடன் குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை நிறைவடையவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் முடிவுறவில்லை என்பதால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.








