Breaking News

உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை - சுரேஷ்

மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான உள்­ளக பொறி­முறை நம்­ப­க­ர­மாக அமையும் சாத்­தியம் இல்லை. சாட்­சிகள் பாது­காப்பு பிரச்­சினை மற்றும் வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­க­ளுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க முடி­யாத நிலைமை உள்­ளிட்ட பல்­வேறு சிக்­கல்கள் உள்­ளன என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ஈ.பி. ஆர்.எல். எப். அமைப்பின் தலை­வரும் முன்னாள் எம்.பி. யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.

அர­சாங்கம் வடக்கு கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முழு­மை­யாக அகற்­றி­விட்டு சாட்­சி­களை பாது­காக்கும் வகையில் உள்­ளக விசா­ர­ணையை நடத்த தயாரா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் ஜெனிவா வந்­துள்ள கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­ம­சந்­திரன் மனித உரிமை பேரவை வளா­கத்தில்  கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு கருத்து வெளி­யி­டு­கையில்

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்கா முன்­வைத்­துள்ள பிரே­ரணை தமிழ் மக்கள் மத்­தியில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கையில் உள்­ளகப் பொறி­முறை ஏற்­பு­டை­ய­தாக அமை­யாது என்றும் கலப்பு நீதி­மன்றம் அவ­சியம் என்றும் உள்­ளக நீதித்­துறை நம்­ப­க­ர­மாக இல்­லை­யென்றும் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால் அமெ­ரிக்கப் பிரே­ர­ணை­ய­னது இலங்­கையின் உள்­ளக நீதித்­து­றையின் கட்­ட­மைப்­பிற்கு அமைய உள்­ளக விசா­ர­ணையை நடத்த முடியும் என்றும் தேவை­யெனில் சர்­வ­தேச மற்றும் பொது­ந­ல­வாய உத­வி­களை பெற முடியும் என்றும் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு உள்­ளகப் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் அத­னூ­டாக பல சிக்­கல்கள் ஏற்­படும். குறிப்­பாக உள்­ளகப் பொறி­மு­றையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் மக்­க­ளுக்கு எவ்­வாறு பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­படும் என்ற கேள்வி எழு­கின்­றது. ஏற்­க­னவே காணாமல் போனோர் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­விற்கு சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு, கிழக்கு மக்­களின் சாட்­சி­யங்கள் இரா­ணு­வத்­தி­னாலும், பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ராலும் அழிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வா­றான ஆபத்து தொடர்ந்தும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளகப் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் இந்த பிரச்­சினை மீண்டும் உரு­வாகும். அதா­வது வடக்கு, கிழக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை முற்­றாக வெளி­யேற்­றி­விட்டும் சாட்­சி­க­ளுக்­கான பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­விட்டும் உள்­ளக விசா­ரணை நடத்த அர­சாங்கம் தயாரா என்ற கேள்­வியை எழுப்­ப­வேண்டி உள்­ளது.

அது­மட்­டு­மன்றி ஐக்­கிய நாடு­களின் கண்­கா­ணிப்பு அலு­வ­ல­கங்கள் வடக்கு, கிழக்கு முழு­வதும் அமைக்­கப்­ப­டுமா? இவ்­வா­றான விட­யங்­க­ளுக்கு பதி­ல­ளித்­து­விட்டு இவ்­வா­றான விட­யங்­களை உறு­திப்­ப­டுத்­தி­விட்டு உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுத்தால் அது நம்­ப­க­ர­மா­ன­தாக அமையும் என கூறலாம். ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் இவ்­வாறு நம்­ப­க­ர­மாக உள்­ளகப் பொறி­முறை இடம் பெறும் சாத்­தி­ய­மில்லை. மேலும் கடந்த ஐ.நா. மனித உரிமை விசா­ர­ணை­யின்­போது வெளி­நா­டு­களில் வசிக்கும் பலர் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது இலங்­கையில் உள்­ளக விசாரணை நடத்தப்படுமானால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அதில் எவ்வாறு சாட்சியமளிக்க முடியும்? உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டில் ஈடுபடும் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று சாட்சியங்களை திரட்ட தயாரா? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன. எனவேதான் நாம் கூறிய இந்த விடயங்கள் இல்லாத உள்ளகப் பொறிமுறை முன்னேற்றகரமாக அமையாது என்று நாங்கள் கூறுகிறோம்.