Breaking News

இனப்படுகொலை இடம்பெற்றதை உறுதி செய்ய மேலதிக விசாரணை அவசியம் - ஐநா

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான தமது அறிக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக குறிப்பிடப்படாமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்
விளக்கமளித்துள்ளது.

ஐநாவின் அறிக்கையில் இனப்படுகொலை விடயம் உள்ளடக்கப்படாமை குறித்து இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் தமிழர் தரப்பினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தமது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஐநா நியாயப்படுத்தியுள்ளது.

இனப்படுகொலை விடயம் தமது அறிக்கையில் கருத்தில் கொள்ளாமல் விடப்படவில்லை என ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ரவீனா ஷம்தசனி தெரிவித்துள்ளார்.

ஐநா அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட கலப்பு விசேட நீதிமன்றம் உள்ளிட்ட மேலதிக குற்றவியல் விசாரணைகள் ஊடாகவே இனப்படுகொலை இடம்பெற்றதா என்பதை கண்டறிய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்படுகொலை என்பதை வரையறுப்பதற்கு விசேடமான நோக்கம் மற்றும் அகநிலைக் கூறுகள் அவசியம் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் தமக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் இனப்படுகொலைக்கான வரையறைகள் பூர்த்திசெய்யப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஆட்சியில் இருந்த அடுத்தடுத்த அரசாங்கங்கள், தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை மேற்கொண்டதாக கடந்த பெப்ரவரி மாதம் வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

என்ன செய்யப் போகின்றது ஐ.நா? விளக்குகிறார் பேச்சாளர் (காணொளி)