காணி உரிமை, கல்வி உரிமை, ஆட்சி உரிமை! இதுவே எமது இலக்கு!மனோ
மலையக மக்களின் முகவரியை மாற்றுவோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போது லைன்அறைகளாக உள்ள மலையக மக்களின் முகவரியை புதிய கிராமங்களை அமைத்து எதிர்காலத்தில் மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 30 வருடங்களாக மலையகத்தின் சொந்தக்காரர் என்று சொல்லித் திரிந்தவர்கள் செய்ய முடியாததை, நாம் கடந்த 7 மாதங்களில் செய்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமைச்சர் திகாம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சின் ஊடாக மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியுடன் புதிய மலையகக் கிராமங்களை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதுடன் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றைப் பெறுவோம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.அத்துடன், மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்தும் அதிக கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சுமார் 15 ஆயிரம் மக்களைக் கொண்ட பிரிவொன்றே ஒரு பிரதேச சபையாக கணக்கிடப்படுகிறபோதிலும் நான்கு லட்சம் மக்களைக் கொண்ட நுவரெலியாவில் இரண்டு பிரதேச சபை பிரிவுகளே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.எதிர்காலத்தில் நுவரெலியாவிற்கு சுமார் 15 பிரதேச சபைப் பிரிவுகளைப் பெறுவது குறித்து பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.