சிறுமி சேயாவின் மரணத்திற்கு நீதி வேண்டி கிளிநொச்சியில் போராட்டம்
அண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்று கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள் அஞ்சலி நிகழ்விலும், கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் பாடசாலை வளாகத்தில் கூடிய பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கொலைசெய்யப்பட்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தியதுடன், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். கறுப்பு கொடி அணிந்து, பதாதைகள் ஏந்தி கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி கவன ஈர்ப்பு போரட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
அஞ்சலி நிகழ்வில் சேயாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும், வித்தியாவின் மரணத்தின்போது நீதி நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாணவர்களால் இரங்கல்கள் வாசிக்கப்பட்டன.








