சர்வதேச விசாரணையை நிறுத்தவே கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி - சுரேஷ்
இலங்கை அரசாங்கம் சர்வதேசப் பொறிமுறை விசாரணையை நிறுத்தவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியுள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்.பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெறுவதற்கு கொண்டுவரப்படவுள்ள சர்வதேச விசாரணையை தடுத்துநிறுத்தவும் அநீதிகளை மூடிமறைக்கவுமே இலங்கை அரசாங்கத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தமிழ் மக்களின் தலைவர்களைப் பயன்படுத்தி தன்னை தற்பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்தப் பொறிக்குள் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விழுந்துவிடக் கூடாது என்றார்.
மேலும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணை மூலம் தீர்வினைப் பெற்றுத்தர முடியாது. இந்த விசாரணை ஈழத் தமிழரை ஏமாற்றுவதாகவும் காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகவும் அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் ஆரம்பம் முதலே சர்வதேச விசாரணையே வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சியிலுள்ள சிலபேர் உள்ளக விசாரணை தொடர்பில் பேச ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று பங்காளிக் கட்சிகளும் இணைந்து சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்திய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளது.
எனவே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை மூலமே உரிய தீர்வு எட்டப்பட வேண்டும். இவற்றை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
எனவே சர்வதேச விசாரணையை முடக்கும் அரசாங்கத்தின் சூழ்ச்சிப் பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர்கள் விழுந்துவிடாமல் அதற்கு முழுமையான ஆதரவையும் சர்வ தேச ரீதியிலான ஆதரவையும் திரட்ட வேண்டும் என்றார்.