கூட்டமைப்பும் வடமாகாண சபையும் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் - சம்பிக்க
இலங்கை மீதான சர்வதேச தலையீட்டை அரசாங்கம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதிக்காது. மாறாக நம்பத்தகுந்த உள்நாட்டு தீர்வுகளை நாம் உறுதிப்படுத்த தயாராக உள்ளோம்.
ஆகவே உடனடியாக கூட்டமைப்பும் வடமாகாண சபையும் சர்வதேசத்தை வலியுறுத்தும் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்பதை நினைவில் வைத்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வடமாகாண சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக சர்வதேச விசாரணை பொறிமுறையை வலியுறுத்தி வருகின்ற நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டில் அங்கீகாரம் பெற்ற ஒரு பிரதான அரசியல் கட்சியாகும். ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலின் போதும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகின்றனர்.
அவ்வாறான நிலையில் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட வேண்டும். அந்த வகையில் கடந்த காலங்களில் தனி அரசாங்கம் அமைந்த நிலையில் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் பெரும்பான்மை கட்சிகள் செயற்பட்டன.
எனினும் இம்முறை அவ்வாறான நிலைமை அமையவில்லை. பிரதான இரு கட்சிகளும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்துள்ளன. இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர். இந்த நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக இந்த கட்சிகள் செயற்பட முடியாது. எனினும் பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைய எதிர்க்கட்சி ஒன்றை நியமிக்க வேண்டும்.
இம்முறை தேர்தலின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தாம் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதாக தெரிவித்தன. அந்த வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தான் கிடைக்கவேண்டிய நிலை இருந்தது. ஆகவே அதற்கு அமைய இம்முறை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவாகியுள்ளது. இதில் எவ்விதமான முரண்பாடுகளும் இல்லை.
கேள்வி :- எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக நியமித்ததை பெரும்பான்மை கட்சிகளின் சிலர் விமர்சிக்கின்றன்றே?
பதில் :- சம்பந்தன் தமிழர் என்பதற்காக மாத்திரமே அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தமை தவறென இவர்கள் குறிப்பிடுவதாயின் அதை எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமையவே அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளனர். ஆகவே இது ஜனாயகத்தின் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதேபோல் தமிழர் ஒருவருக்கு எதிர்க்கட்சி பதவி கிடைப்பதானால் நாடு பிரிவினையின் பக்கம் செயற்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறுபட்ட கொள்கையில் உள்ள கட்சியாக இருந்தாலும் கடந்த காலங்களில் எம்முடன் இணைந்து நாட்டில் நல்லாட்சிக்கான போராட்டத்தில் உதவியுள்ளனர்.
அதேபோல் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிவினையை ஆதரிக்கவில்லை என்பதை தொடர்ச்சியாக குறிப்பிட்டு வருகின்றார். ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டில் பிரிவினை ஒன்று ஏற்படப்போவதில்லை. அதேபோல் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை அனுமதிக்கப் போவதில்லை. கடந்த காலத்தில் இந்த நாட்டுக்காக எவ்வாறு பொறுப்புடன் செயற்பட்டோமோ அதே நிலைப்பாட்டில் தான் இப்போதும் செயற்படுகின்றோம்.
கேள்வி :- இலங்கை மீதான தொடர்ச்சியான சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்று அவசியம் என்பதை வடமாகாண சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்றது. இதை எவ்வாறு கருதுகின்றீர்கள்?
வடமாகாண சபையின் செயற்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடானதாகவே அமைந்துள்ளது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிரதான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது. இந்த நிலையில் இவர்கள் தமது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியாக செயற்படும் சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடனும் நாடு மக்களின் சார்பிலும் நின்று செயற்ப்பட வேண்டும் . அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. இலங்கை மீதான சர்வதேச தலையீட்டை இந்த அரசாங்கம் ஒரு சந்தர்ப்பத்திலும் அனுமதிக்காது.
மாறாக நம்பத்தகுந்த உள்நாட்டு தீர்வுகளை நாம் உறுதிப்படுத்த தயாராக உள்ளோம். அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். தொடர்ந்தும் கூட்டமைப்பு நாட்டுக்கு முரணான வகையில் ஏதேனும் செயற்பாடுககளை முன்னெடுக்குமானால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குமே சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே உடனடியாக கூட்டமைப்பும் வடமாகாண சபையும் தமது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி :- இந்த புதிய ஆட்சியில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுமா என்ற கேள்வி தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கு பதில் உள்ளதா?
பதில் :- நிச்சயாமாக இந்த ஆட்சியில் நாட்டில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும்.கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அமையப்பெற்ற நூறு நாட்கள் தேசிய அரசாங்கத்தில் இந்த நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக வடக்கில் நல்ல ஜனநாயக மாற்றங்கள் ஏற்பட்டன. அதேபோல் இப்போதும் தேசிய அரசாங்கம் அமைந்துள்ளது.
இதில் தமிழ் சிங்கள முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட முடியும். அதேபோல் எதிர்க்கட்சி தமிழ் மக்களின் குரலாக அமைந்துள்ளது. ஆகவே இதுவே நாட்டில் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு அடிப்படியாகும் என் நன் நினைக்கின்றேன். எதிர்வரும் காலங்களை நிரந்தர சமாதானம் ஒன்றை நாம் எதிர்பார்க்கலாம்.