மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை! மோடிக்கு ஜெயா கடிதம்
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்டுள்ள 28 படகுகளையும் உடனடியாக விடுவிக்க உறுதியான, சாதகமான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில்,
கடந்த 21ம் திகதியன்று நாகப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து 15 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அங்குள்ள காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்களைத் தங்களது பாரம்பரிய பாக் சந்திப் பகுதியில் மீன்பிடிக்க விடாமல் தடுக்கும் நோக்கில், அப்பாவியான, நிராயுதபாணியாக இருந்த 15 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் எப்போதும் ஒன்றாக விளங்கக் கூடிய கச்சத்தீவுப் பகுதியில் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, தமிழகத்தில் உள்ள அந்தச் சமுதாய மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் 28 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமே இதுவரை இருக்கின்றன என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அப்பாவி ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் துணையாக இருப்பது படகுகளும், அதுசார்ந்த பொருள்களும்தான். அவற்றை வேண்டுமென்றே இலங்கைக் கடற்படையினர் விடுவிக்காமல் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
மேலும், நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளால் ஏழை மீனவர்களுக்கு மிகப் பெரிய அளவில் நிரந்தர இழப்பு ஏற்படும்.
கச்சத்தீவை அளிப்பது தொடர்பாக, கடந்த 1974, 1976-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்பதை எனது தலைமையிலான அரசு உறுதியாக நம்புகிறது.
இதை பல்வேறு தருணங்களில் கோடிட்டுக் காட்டியுள்ளேன், இந்தப் பிரச்னை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் கூறே, கடந்த 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தத்தையும் செய்யாமல் மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தைச் செல்லாததாக அறிவிப்பதும், கச்சத்தீவை இந்தியாவிடம் அளிக்க வேண்டும் என்பதும்தான்.
புவியியல், கலாசார, வரலாற்று ரீதியாக கச்சத்தீவு என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகும் என்பதே எங்களது நிலைப்பாடு. அப்படிப்பட்ட கச்சத்தீவை மீட்பதன் மூலம், இலட்சக்கணக்கான இந்திய மீனவர்களின் பாதுகாப்பையும், வாழ்வாதார நலத்தையும் உறுதி செய்ய முடியும்.
இந்திய கடல் எல்லைப் பகுதியில் நமது மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை மேற்கொள்ள ஏதுவாகப் பல்வேறு புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், பல திட்டங்களைச் செயல்படுத்த ரூ.1,520 கோடியை மத்திய அரசிடம் நிதியாகக் கோரியுள்ளது.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக அவர்களது பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிப்பதைத் தடுப்பது அநீதியாகும். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, கச்சத்தீவை மீட்பதும், மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை மீண்டும் பெறுவதும் நீண்ட காலப் பிரச்னையாகும்.
எனவே, இந்தப் பிரச்னைக்கு ஒரு பொருத்தமான தீர்வைத் தங்களது அரசு கண்டறியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தச் சூழ்நிலையில், மீனவர்கள் கைது செய்யப்படும் விஷயம் தீர்க்கப்பட வேண்டும். எனவே, இப்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்கள், 28 படகுகளை உடனடியாக விடுவிக்க உறுதியான- சாதகமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.