Breaking News

ரணில் நாடு திரும்பியதும் இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்படும்

இந்திய விஜயத்தை முடித்து ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அவருடன் தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார் த்தையை நடாத்த தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், தமது கட்சியை பொறுத்தவரை தேசிய அரசாங்கத்தினால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் மக்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு அமைய தற்போதும் ஒரு கூட்டு அரசாங்கம் அமையப்பெற்றுள்ளதாகவும், அதில் நாட்டின் நலன் கருதிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்,சிங்கள, முஸ்லிம் மக்களின் தேவைகளையும், நலன்களையும் கருத்தில் கொண்டு இந்த புதிய அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும், நாட்டுக்கும் மூவின மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை தாம் ஆதரிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் தீர்க்க வேண்டிய தேசியப் பிரச்சினைகள் பல உள்ளதாகவும், குறிப்பாக தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், தேசிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வைத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆதரிக்கவில்லைவில்லை எனவும், அதே நிலைப்பாடே தற்போதும் உள்ளதாகவும், நாடாளுமன்றிலும் அதனைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதை அவசியமற்ற ஒன்றாகவே கருதுவதாகவும், நாட்டில் குறைந்த அமைச்சரவையை கொண்ட நாடுகள் சிறப்பாக செயற்படுகின்றமைக்கு பல உதாரணகளை முன்வைக்க முடியும் எனறும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.