Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 02

பண்டிவிரிச்சானுக்குச் சென்ற பரமசிவத்தால் எதையுமே திடமாக அறிய முடியவில்லை.
போராளிகளிடம் விசாரித்த போது எவரும் காயப்பட்டோ, வீரச்சாவடைந்தோ வரவில்லை எனவும் முள்ளிக்குளத்துக்குள் இராணுவம் இறங்கிவிட்டது என்பதையும் மட்டும் அறிய முடிந்தது.அப்படியானால் சண்டை எதுவும் நடைபெறாமலே இராணுவம் முன்னேறியிருக்க வேண்டும் என்றே கருதவேண்டியிருந்தது. ஆனால் இரவு, பகலாக மழை, வெயில், பனி என்பவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லை காக்கும் போராளிகள் எந்தவித எதிர்ப்புமின்றிப் படையினரை முன்னேற விட்டிருப்பார்கள் என்பதை அவரால் நம்பமுடியவில்லை.

பல்லாயிரம் சில் வண்டுகள் ஒன்றாக ஒலித்துவிட்டு திடீரென நிறுத்தும் போது ஏற்படும் ஒரு விதமான இனம்புரியாத பயம் போன்ற ஒரு உணர்வே அவரை ஆட்கொண்டிருந்தது.

பலவிதமான கேள்விகளால் குழம்பிப் போயிருந்த மனதுடன் அவர் தனது சைக்கிளை மீண்டும் மடுவை நோக்கி மிதித்தார். முள்ளிக்குளம் மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்து மடுவிலும் தட்சணாமருத மடுவிலும் தங்கியிருந்தனர். முள்ளிக்குளம், குஞ்சுக்குளம் பிரதேசங்கள் அடிக்கடி சண்டைகள் நடக்கும் இடங்களாகவே விளங்கின.

அவர் மடுவைத் தாண்டி தட்சணா மருதமடுவை நோக்கி வந்த போது முள்ளிக்குளம் முருகப்பரைக் கண்டதும் சைக்கிளை நிறுத்தினார். 

முருகப்பருக்குத் தெரியாத காட்டுப் பாதைகளே கிடையாது. காடுகளில் கேட்கும் சிறு அசைவுகளில் ஒலியையும் அவர் காதுகள் துல்லியமாகக் கிரகித்து அது எப்படிப்பட்டது எனக் கண்டுபிடித்துவிடும். அது போன்றே அவரின் நுகர்வு சக்தியும் அற்புதமானது. வாசனையை கிரகித்தே சுற்று வட்டாரத்தில் என்ன மிருகங்கள் என்று கண்டுபிடித்துவிடுவார். அவர் கையில் வேட்டைக்கட்டு கட்டப்பட்ட உடும்புக்கள் இரண்டைக் கொண்டு வந்த போதே காட்டுக்கு வேட்டைக்குப் போயிருக்கிறார் என்பதை பரமசிவம் புரிந்து கொண்டார்.

சைக்கிளை நிறுத்திய பரமசிவம் “என்ன.. ராத்திரி காட்டுக்க இறங்கியிருக்கிறாய் போல கிடக்குது!” என முருகப்பரைப் பார்த்துக் கேட்டார்.

“ஓ.. ஒண்டும் அணையேல்ல.. ஒரே செல்லடி.. அதில காட்டுக்கை கனதூரம் உள்ள இறங்கவும் முடியேல்ல. திரும்பி வரேக்கை தான் நாயள் ரண்டு உடும்புகளைக் கௌவிச்சுதுகள்”

உடும்புகளை நன்றாகப் பார்த்துவிட்டு பரமசிவம் “ஒண்டைத்தாவன்”, எனக் கேட்டார்.

முருகப்பர் பெரிதாக இருந்த உடும்பைத் தூக்கி பரமசிவத்திடம் கொடுத்தார். விலை பேசுவது உடனே காசை எதிர்பார்ப்பது போன்ற பழக்கமெல்லாம் அவர்களிடம் இல்லை. மாலையோ அல்லது அடுத்த நாளோ முருகப்பரைச் சந்திக்கும் போது ஏதோ தான் விரும்பும் பணத்தைக் கொடுப்பார் பரமசிவம். முருக்கப்பரும் விரித்துப்பார்க்காமலேயே வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்.

“முள்ளிக்குளம் பக்கம் ஏதும் விசேசமே?”

“ஒண்டுமாய் விளங்கேல்ல.. விடியப் புறமாய் நாலைஞ்சு பெரிய வாகனங்களில பொடியள் முள்ளிக்குளம் பக்கமாய் போனாங்கள்… ராத்திரியும் ஒரே செல்லடி” என்றார் முருகப்பர்.

முள்ளிக்குளம் நோக்கிப் போராளிகள் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது அவருக்கு சில விஷயங்கள் புரிவது போல் தோன்றியது. இப்போது நிலவுவது புயலுக்கு முன்பான அமைதியாகத் தான் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது.

உடும்பை வாங்கி சைக்கிள் ஹான்டிலில் கொழுவிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.

தோட்டத்தில் மிளகாய்க் கண்டுகளுக்கு தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த பரமசிவத்தின் இளைய மகனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பத்துப் பதினைந்து வருடம் பழமை வாய்ந்த “வூல்சிலி” நீரிறைக்கும் இயந்திரம் ஒரு சீரான ஒலியுடன் மோட்டையிலிருந்த நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

தண்ணீர் மாறுவதில் ஒரு சிறிய தாமதம் ஏற்பட்டாலும் நீர் வாய்க்கால்களே உடைத்துப் பாயத் தொடங்கிவிடும். வழமையாக ஏழரை எட்டு மணிக்கெல்லாம் வந்து தன்னிடம் மண்வெட்டியை வாங்கிக் கொண்டு தன்னைச் சாப்பிட விடும் பரமசிவம் ஒன்பது மணியாகியும் வராதது அவனுக்கு கோபத்தை மூட்டியது.

இறைப்பை நிறுத்துவது என முடிவு செய்தான். ஆனால் தண்ணீர் மாறுவதை விட்டு விட்டு இயந்திரத்தை நிறுத்தப் போனால் நீர் மேவிப்பாய்ந்து வாய்க்கால்கள், பாத்திகள் எல்லாவற்றையும் உடைத்துவிடும்.

தனது தாயுடன் மிளகாய்ப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த முத்தம்மாளைக் கூப்பிட்டான் அவன். அவள் அருகில் வந்ததும், “இந்தத் தண்ணிய கொஞ்ச நேரம் மாறு, நான் போய் மிஷின நிப்பாட்டிப்போட்டு வாறன்”, என்றான் சுந்தரசிவம்.அவள் எதுவும் பேசாமல் மண்வெட்டியை வாங்கிக் கொண்டாள்.

முத்தம்மாளின் தகப்பனான பெருமாளும், தாய் வேலம்மாவும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், 1983 இன வன்முறைகளை அடுத்து முதலில் வவுனியாவிலும் பின் பூவசரன்குளத்திலும் குடியிருந்தனர். பின்பு இராணுவ நடவடிக்கை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து மடுவுக்கு வந்தனர். இப்போ தட்சிணாமருத மடுவில் நிரந்தரமாகக் குடியிருந்தனர். கூலி வேலை செய்தே அவர்கள் சீவியம் போனது.. பெருமாள் ஒரு நல்ல தொழிலாளியாக இருந்த போதும் கசிப்பு அவனை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தகப்பனையும், நாலு பிள்ளைகளையும் வேலாயியும் மூத்த மகள் முத்தம்மாவுமே உழைத்துப் பார்க்க வேண்டியிருந்தது.

முத்தம்மா நன்றாகவே பாடுவாள். சில தடவைகள் காத்தவராயன் கூத்துப் பார்த்திருக்கின்றாள்.அவளுக்கு அப்படியே முழுப்பாடல்களும் பாடமாகிவிட்டது. அவள் மிளகாய்ப்பழம் பிடுங்கும் போது காத்தான் பாட்டுக்களைப் பாடுவதைச் சுந்தரம் தன்னை மறந்து ரசித்திருக்கிறான். பரமசிவத்தாரின் கூத்தில் சுந்தரம் தான் ஆதிகாத்தானாக நடிப்பான்.

அவனின் வரவுப்பாட்டுக்கு மக்களிடம் ஒரு தனி மவுசு உண்டு. ஆரியப்புமாலையாக முத்தம்மாவை நடிக்க வைக்கவேண்டுமென அவனின் மனதுள் ஒரு ஆசை இருந்ததாலும் அவன் அதை வெளியே சொல்வதில்லை. ஏனெனில் பெண் பாத்திரங்களுக்கும் வழமையாக ஆண்களே நடிப்பார்கள்.

சுந்தரம் மண்வெட்டியை அவளிடம் கொடுத்தவாறே.“நீ பாடிப்பாடித் தண்ணி மாறு. நான் கேட்டுக்கொண்டே போய் மிசினை நிப்பாட்டுறன்” என்றான்.

“நீங்க பாடிக்கொண்டு போங்கோ.. நான் கேட்டுக்கொண்டே தண்ணி மாறுறன்” என்று விட்டு நீரைப் பாத்தி மாற்றி விட்டாள் அவள்.

“அப்படியே, போய்க்கொண்டே பாடுறன் கேள்” என்று விட்டு இயந்திரம் இருந்த மோட்டைக்கரையை நோக்கி நடந்தான். அவன் வாயில் “விடமாட்டேன்…. ஆரியமாலையை மாமணம் செய்யாமல் விடமாட்டேன்” என்ற பாடல் வரிகள் இனிமையாக வெளிவந்து அந்தத் தோட்டமெங்கும் நிறைத்தது.

அதற்கு எதிர்ப்பாட்டுப்பாட வேண்டும் என்ற உந்துதல் அவளுள் எழுந்த போதும் சிரமப்பட்டு அதை அடக்கிக் கொண்டாள். அவள் முகம் மட்டும் அவளையறியாமலே “குப்பென்று” சிவந்தது.

சுந்தரம் நீரிறைக்கும் இயந்திரத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிய போது பார்வதி சாப்பாட்டுடன் வந்துகொண்டிருந்தாள்.

சுந்தரம் “ஐயா, எங்கையம்மா?” எனக் கேட்டான்.

“அவர் என்னை இஞ்சை போகச் சொல்லிப்போட்டு மடுப்பக்கம் போட்டார். நீ கையைக் கழுவிப் போட்டு சாப்பிட வா” என்றாள் அவள்.

அவன்“ தகரப்பட்டையில் எடுத்து தை்திருந்த நீரில் கை கழுவி விட்டுதாயின் அருகில் வந்தான்.

பார்வதி, “வேலாயி, முத்தியையும் கூட்டிக்கொண்டு வா.. ஒரு பிடி சாப்பிடுங்கோ” எனப் பலத்த குரலில் அழைத்தாள்.

“வேண்டாமம்மா.. நாங்க றொட்டி கட்டீற்று வந்தம்’ என்றாள் வேலாயி.

“அதைப் பிறகு தின்னுங்கோ.. இப்ப உங்களுக்கும் சேத்துத் தான் கொண்டந்தனான்”

வேலாயி மேற்கொண்டு எதுவும் பேசாமலேயே முத்தம்மாவுடன் அருகில் வந்தாள். பார்வதியின் பழம் சோற்றுக் குழையல் சாப்பிடுவதில் அவர்களுக்கு தனி விருப்பம் உண்டு.

பழைய விரால் மீன் குழம்புக்குள் போட்டுக் குழைத்த பழஞ்சோற்றைப் பிஞ்சு மிளகாயுடன் கடித்து உண்ட போது அது அவர்களுக்கு அமுதமாகவே தோன்றியது. எல்லோரும் வயிறு நிறையச் சாப்பிட்டனர். சுந்தரம், முத்தம்மா ஆவலுடன் சாப்பிடுவதை இடையிடையே பார்த்து ரசிக்கத் தவறவில்லை. 

அவர்கள் இவ்வாறு சந்தோசமாக தோட்டத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் களமுனையில் இதுவரை குழம்பிய மனதுடன் தவித்துக் கொண்டிருந்த சங்கரசிவத்துக்கும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த தெளிவு பிறப்பது போலவே தோன்றியது.

புதிதாக இரண்டு அணிகள் களமுனைக்கு வந்ததுமே அடுத்த தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாகவே அவன் கருதினான். இரவு மேற்கொள்ளப்பட்ட பின் நகர்வில் ஒரு ஆழமான அர்த்தம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-