'பிபா' தலைவர் பதவித் தேர்தல் விதிமுறையில் மாற்றம் தேவை
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ( பிபா) தலைவர் பதவிக்கான தேர்தல் விதிமுறையில் மாற்றம் செய்ய வேண்டுமென்று பிபா தலைவர் செப் பிளேட்டரிடம், பிரேஸில் அணியின் முன்னாள் வீரர் ஜிகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
பிபா தலைவராக 5 ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்ட செப் பிளாட்டர் தனது பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார்.
இதனால் வரும் பெப்ரவரி மாதம் பிபா தலைவர் பதவிக்கான தேர்தல் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக ஜிகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
பிபா அமைப்பில் தற்போது உள்ள விதிமுறைப்படி ஒருவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமானால் அவருக்கு 5 கால்பந்து சங்கங்களின் ஆதரவு தேவை. அப்போது தான் வேட்பு மனுவே தாக்கல் செய்ய முடியும். ஜிகோவுக்கு பிரேஸில் கால்பந்து சங்கத்தின் ஆதரவு மட்டுமே உள்ளது.
அவர் மேலும் நான்கு கால்பந்து அமைப்புகளின் ஆதரவை தேடி வருகிறார். இதற்கிடையே துருக்கி மற்றும் ஜப்பானில் ஜிகோ பயிற்சியாளராக நீண்ட காலம் செலவிட்டிருக்கிறார்.
இதனால் இந்த 2 அமைப்புகளின் ஆதரவும் தனக்கு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். வரும் அக்டோபர் 26 ஆம் திகதிக்குள் மேலும் 4 அமைப்புகளின் ஆதரவை பெற்றால் மட்டுமே தலைவர் பதவி குறித்து ஜிகோ நினைத்துப் பார்க்க முடியும்.
இதற்கிடையே பிபா அமைப்பு தேர்தல் விதிமுறையில் மாற்றம் தேவை என்று பிளாட்டரிடம் ஜிகோ வலியுறுத்தியுள்ளார்.









