இங்கிலாந்து பயிற்றுநர் குழாமில் மஹேல, கொலிங்வுட்
பாகிஸ்தானுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களை முன்னிட்டு மஹேல ஜயவர்தன, போல் கொலிங்வுட் ஆகியோரை விசேட பயிற்றுநர்களாக இங்கிலாந்து நியமித்துள்ளது.
இதன் மூலம் தனது நிபுணத்துவ பயிற்றுநர் குழாமை இங்கிலாந்து பலப்படுத்திக்கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யும் இங்கிலாந்து அணியின் பயிற்சிப் போட்டியின் போதும் பாகிஸ் தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போதும் இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சிகளை மஹேல ஜயவர்தன வழங்கவுள்ளார்.
ஆசிய கண்ட ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்துள்ள மஹேல ஜயவர்தன, இந்த ஆடுகளங்களில் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரது உதவியை இங்கிலாந்து பெறத் தீர்மானித்தது.
இலங்கை அணிக்கு பயிற்றுநராக இருந்த ட்ரவோ பெய்லிஸ், உதவிப் பயிற்றுநராக இருந்த போல் ஃபார்ப் ரேஸ் ஆகியோருடனான தொடர்புகளை இந்தப் புதிய பதவி மூலம் மஹேல ஜயவர்தன தொடரவுள்ளார்.
சுழல் பந்துவீச்சாளர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குவதே மஹேலவின் பிரதான பணியாக இருக்கும்.
இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான போல் கொலிங்வுட், சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளின்போது துடுப்பாட்டப் பயிற்றுநராக செயற்படவுள்ளார்.
மஹேலவும் போலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முகாமைத்துவக் குழுவில் இணைவதையிட்டு தாங்கள் பெருமிதம் அடைவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் அண்ட்றூ ஸ்ட்ரோஸ் தெரிவித்தார்.