Breaking News

ஜெனீவா அறிக்கையினால் கூட்டமைப்பிற்குள் பிளவு : என்கிறார் டிலான்

ஜெனீவாவில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டிருப் பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கின்றது.


இந்த அறிக்கை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், அக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தேசிய அரசாங்கத்திற்கு முதலாவது முறையாக ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையினால் இரண்டாக பிளவடைந்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் இடையில் இந்த விசாரணை அறிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

எனினும் இதிலுள்ள நன்மை, தீமை குறித்து நான் இங்கு கருத்து கூற விரும்பவில்லை.எவ்வாறாயினும் நாடு என்ற ரீதியில் முகங்கொடுத்துவருகின்ற சவால்களை வெற்றிகொள்ளச் செய்ய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து வருவதை வரவேற்கின்றோம் – என்றார்.