ஆறாய் ஓடிய குருதி கழுவவோ எதிர்க்கட்சித் தலைவர் பதவி!
இயேசு பிரானின் இராப்போசனம் நடக்கிறது. இயேசுவின் சீடர்களில் ஒருவனாகிய யூதாஸ் கரியோத் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான்.
முப்பது வெள்ளிக்காசுக்காக அந்தக் காட்டிக் கொடுப்பெனும் துரோகத்தனம் நடந்தேறுகிறது. கூடவே ; இயேசுவோடு உடனிருந்த இராயப்பர் திருச் சபையின் முதலாவது பாப்பரசர் என்ற பெருமைக் குரியவர். இயேசுவோடு உடனிருந்ததை மூன்றுமுறை மறுதலிக்கின்றார்.
இறைமகனின் வாழ்வில் நடந்த துரோகத்தனங்கள் இன்றுவரை நீடித்தாலும் இலங்கைத் தமிழினத்தில் அந்தத் துரோகத்தனம் வலிமையாக இருப்பதைக் காணமுடிகிறது.
கடந்த 30 ஆண்டு கால போராட்டம்; அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த ஏகப்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் என்ற துயரத்திற்கு மேலாக வன்னியில்-முள்ளிவாய்க் காலில் நடந்த தமிழின அழிப்பு; அதனைத் தொடர்ந்து மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட நெட்டூரம்; அவ்வப்போது ஆட்கடத்தல்; சரணடைந்த போராளிகள் காணாமல்போன சோகம் என்ற பேரிழப்புகளை தமிழினம் சந்தித்தது.
உலகில் நடந்த மிகப்பெரிய மனிதப் பேரவலம் என்று வர்ணிக்கப்பட்ட வன்னிப் போர் அழிவுகளை கண்டும் அமைதியாக இருந்து பார்த்த ஐ.நா சபை இப்போது தமிழர்களைப் பாதுகாக்க தவறிவிட்டோம் என வருத்தம் தெரிவிக்கிறது.
காலம் கடந்து, ஐ.நா தெரிவிக்கும் கவலை உயிரிழந்தவர்களை மீட்டு வரவா போகிறது? அவர்கள் தான் இப்படி நடந்து விட்டார்கள் என்றால், தமிழர்கள் நம்பிக்கையோடு பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் விடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை காணிக்கையாக பொறுப்பேற்றுக் கொண்டனரோ.
இதைப் பார்க்கும் போது 30 வெள்ளிக்காசுக்காக யேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் எவ்வளவோ மேல் எனலாம். ஏனென்றால் ஒரு கட்டத்தில் யேசுவைக் காட்டிக் கொடுத்தது மகா துரோகத்தனம் என்றுணர்ந்த யூதாஸ் தான் செய்த பாவத்திற்காக தற்கொலை செய்து கொண்டான்.
ஆக, முப்பது வெள்ளிக்காசுகளில் ஆசை கொண்ட யூதாஸிடம் கூட மனச்சாட்சி இருந்தது. அதனால்தான் தான் செய்த பாவ பழிக்காக அவன் தன்னுயிரை மாய்த்துக் கொண்டான். ஆனால் இங்கோ பல்லாயிரக்கணக்கானவர்களின் குருதியை; குற்றுயிராய் கிடந்து துடிதுடித்து அவலமாய் இறந்தவர்களின் வேதனையை தானமாக்கி தலைமைப் பதவி பெறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? நான் இறப்பதற்கு முதல் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து காட்டுவேன் என்ற தனிப்பட்ட சபதத்தை இது நிறைவேற்றுமேயன்றி, தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத் தர இப்பதவி உதவமாட்டாது.
மாறாக இந்தப் பதவியை பெற்றதற்காக சர்வதேச விசாரணை இலங்கை அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. பரவாயில்லை அமிர்தலிங்கம் போல நானும்... என்ற நினைப்போடு செயற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர் என்று சபாநாயகர் அறிவித்த பின்பு உரையாற்றிய சம்பந்தர் வன்னியில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறேன் என்று கூறியிருந்தால் தமிழினம் சம்பந்தரின் காலைத் தொட்டு வணங்கியிருக்கும். அல்லது வன்னியில் உயிரிழந்த உறவுகளே உங்களுக்கு அஞ்சலி என்று குரலிட்டிருந் தால் சம்பந்தன் எங்கள் தலைவன் என்று தமிழர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பர்.
என் செய்வோம்... ஓ! யேசுபிரானே தமிழர்களிடம் இருக்கக்கூடிய யூதாஸுகளுக்கு உன் உடலையும் குருதியையும் கொடுத்து அவர்களை புனிதமாக்கும். இல்லையேல் அவர்கள் மனிதக்குருதிகளை பதவிகளாக மாற்றி இனத்தை அழிப்பர். பரம பிதாவே தடுத்து அருள் செய்யும்.
-வலம்புரி -
-வலம்புரி -








