தமிழர்கள் எதிர்ப்பார்த்த நல்லாட்சி இதுவல்ல : சிறிதரன்
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கப்படுவது அரசின் இனவாதத்தைக் காட்டுவதற்கான வெளிப்பாடே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிடுகின்றார்.
வன்னி மாவட்டத்தின் நிலைமைகள் மற்றும் அரசின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இத குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
‘வன்னி மாவட்டத்தில் வலுக்கட்டாயமாக காடுகள் அழிக்கப்பட்டு காட்டுப் பிரதேசத்தில் தமது மதம் சார்ந்தவர்களை குடியேற்றம் செய்யும் நிலையில் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இது அரசின் பிரித்தாளும் தந்திரமாக உள்ளது.
இரண்டு சகோதர இனங்களுக்கிடையில் பிரச்சினையை உண்டாக்கி அவர்களுக்கிடையில் இன விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவே அரசு முயல்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறினாலும் ஆட்சி மாறியுள்ள போதும் காட்சிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. குறிப்பாக புனர்வாழ்வளிக்கப்பட்டு இயல்பு வாழ்வுக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதும் வவுனியா, ஜோசப்முகாம், 4 ஆம் மாடி போன்ற இடங்களுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் அவர்கள் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இதனைவிட பலர் இரகசியமாக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் விசாரணை என கூறி அலைக்கழிக்கப்படுவதும் இடம்பெறுகின்றன. கடந்த கால ஆட்சியைப் போலவே தற்போதைய நிலையும் காணப்படுகின்றது.
இதேவேளை சிறைக்கைதிகளின் விடயமும் அவ்வாறானதே. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்போது பல்வேறுபட்ட அரசியல் போராளிகள் விடுவிக்கப்பட்டார்கள்.
இதேபோல் 2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டார்கள்.
ஆனால் 2009இற்கு பின் எவ்வித விசாரணைகளும் இன்றிப் பலர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் யுத்த காலத்திற்கு முன் உணவு கொடுத்ததற்காகவும் கைது செய்யப்பட்டவர்கள் எவ்வித விசாரணைகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அரசியல் கைதிகள் விடயம் என்பது இன குரோதம், பேரினவாத சிந்தனையோடும் இனவாத நோக்கமாகவே பார்க்கப்படுகின்றது. அரசு இதனை இவ்வாறு பார்த்து இழுத்தடிக்குமானால் நல்லாட்சி என்பதும் தமிழ் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தமை என்பதும் மிக மோசமான கட்டத்தை அடைந்து செல்லும்.
தமிழர்கள் எதிர்பார்த்த நிலை இதுவரை வரவில்லை. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு நிலங்கள், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், மருதநகர் காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை.
இவற்றுக்கான உரிய தீர்வுகள் எட்டப்படும்போதுதான் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும்.’ என்றும் கூறினார்.








