Breaking News

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி மரணம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார்.

நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் உள்ளதாகவும், நண்பகல் 12 மணியளவில் பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்படுமென்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக சேர்ந்தார். பின்னர், தன்னுடைய சிறப்பான செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக உயர்ந்தார்.

இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.

புனர்வாழ்வு நடவடிக்கையின்போது அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முன்னைய காணொளிகள்