Breaking News

19 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக மற்றும் இந்திய அரசாங்கத்திடம் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜீ.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியாவின் நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த 19 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்தனர். 

நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் எழிலரசன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் காமராஜ் (40), ராமச்சந்திரன் (40), பழனிசாமி (36), வேல்முருகன் (30), சுந்தர்ராஜன் (30), கேசவன் (25), சுப்ரமணியன் (30), மனோன்மணி (45), ரவி (50),கணேசன் (25) ஆகிய 10 பேரும் கடந்த 5-ஆம் திகதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். 

இதேபோல், கீச்சாங்குப்பம், பிரதான சாலையைச் சேர்ந்த மாரியப்பன் (60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரவி (42), ஜெயபால் (55), பாலமுருகன் (26), ஆறுமுகம் (30), உதயன் (25), பாலமுருகன் என்கிற பாலா (30), கிறிஸ்துராஜ் (45), காளிதாஸ் (35), மணிகண்டன் (24) ஆகிய 9 பேரும் கடந்த 8-ஆம் திகதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். 

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். 

பின்னர் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 19 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர், என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.