Breaking News

நம்பிக்கையற்று போயுள்ள காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள தயங்குவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றிற்கு அளித்துள்ள விஷேட செவ்வியிலே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த விசாரணைகளை வேறு ஒரு பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் கோரும் நிலையில், ஆணைக்குழு கலைக்கப்பட்டு விரைவில் வேறு ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டு புதிய விசாரணை கட்டமைப்பொன்று உருவாக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுவானது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சாட்சியங்களை பதிவு செய்து வந்தாலும், அதன் விபரங்களோ அல்லது விசாரணையின் முன்னேற்றம் குறித்தோ எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. இதனால் காலப்போக்கில் குறித்த சாட்சியப்பதிவை புறக்கணித்த மக்கள் உள்ளக விசாரணையை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.

இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்த மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு, மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்டவற்றை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட உதாலகம ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணை அறிக்கைகளை வெளியிடுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்டவை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், இத்தனை காலமும் மஹிந்த அரசால் மூடி மறைக்கப்பட்ட குறித்த ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.