Breaking News

கனடா நாடாளுமன்றத் தேர்தல் – ஹரி ஆனந்தசங்கரி முன்னணியில்

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி முன்னணியில் இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 3642 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில், ஹரி ஆனந்தசங்கரி 6579 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதே தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான சக்திகுமார் 1035 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதனிடையே ஸ்காபரோ நோர்த் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு கடந்தமுறை வெற்றி பெற்ற ராதிகா சிற்சபைஈசன் மூன்றாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவர் இதுவரை 1075 வாக்குகளைப் பெற்று உள்ளார் லிபரல் கட்சி வேட்பாளர் சான் சென் 2186 வாக்குகளுடன் முதலிடத்திலும், கொன்சர்வேட்டிவ் வேட்பாளர், ரவிந்தர் மால்கி 1280வாக்குகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

ஸ்காபரோ தெற்மேற்கு தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு ஈழத் தமிழரான ரொசான் நல்லரத்தினம், 468 வாக்குகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியில் தேசிய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா என்ற ஈழத்தமிழர்,107 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.அதேவேளை, இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் லிபரல் கட்சி கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

லிபரல் கட்சி 129 தொகுதிகளிலும், ஆட்சியில் இருந்த கொன்சர்வேட்டிவ் கட்சி 77 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கட்சி 17 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன.