Breaking News

தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமியின் மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகோதரி தமிழினி நேற்று உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது. தமிழ் ஈழத்தின் தொன்மை வரலாறு, அனைத்துலக நாடுகளின் அணுகுமுறை அனைத்தையும் தேர்ந்து தெளிந்திருந்த இந்த வீராங்கணை இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றினார். 

2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 2013 வரை சிறப்புத் தடுப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். 

தற்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகிற அந்த வீர தமிழ் நங்கைகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பொதுவாக வெளியிடுவதில்லை. 

நெடுதுயர்ந்த கம்பீரமான தோற்றமும், இனிய பண்புகளும் நிறைந்த வீராங்கணை தமிழினியின் நல்லடக்கம் நாளை நடைபெறுவதாக அறிகிறேன். வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.