Breaking News

போர்க்குற்ற விசாரணைக்கு தனி நீதிமன்றம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை!

உள்ளகப் பொறிமுறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படுவது தொடர்பாக, தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று, இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,

”இறுதிக் கட்டப் போர் தொடர்பாக கலப்பு நீதிமன்ற விசாரணை இடம் பெறவுள்ளதாகவும், இதற்காக தனியாக நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளதுடன் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜெனிவா தீர்மான வரைவில் ஆரம்பத்தில் கலப்பு விசாரணை எனக் கூறப்பட்டிருந்தது.ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கலப்பு விசாரணை பரிந்துரை நீக்கப்பட்டது.

கலப்பு விசாரணை என்பது ஐ.நா நியமிக்கும் நீதிபதிகள் மூலமான விசாரணையாகும். அதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம்.தற்போது இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைய , எமது சட்டங்களுக்கு அமைய உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணையே இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்களின் பங்களிப்பு தேவையா- இல்லையா என்பது தொடர்பாக சிறிலங்கா அரசுடன் பேசி, இணக்கப்பாட்டிற்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும். அதைவிடுத்து அனைத்துலகம் எதனையும் தன்னிச்சையாக தீர்மானிக்காது. அத்துடன், ஐ.நா. விசாரணை அறிக்கை ஜெனிவா தீர்மானம் தொடர்பான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையாகவே முன்னெடுக்கிறது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதேவேளை, பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலும் வெளிநாட்டு நீதிபதிகள், நிபுணர்களின் உதவிகள் பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளகப் பொறிமுறை விசாரணைக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவில்லை. தேவைப்பட்டால் அது தொடர்பில் ஆராயலாம்” என்று தெரிவித்தார்.