Breaking News

தமிழக மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை

இலங்கை சிறைகளிலுள்ள தமிழக மீனவர்களை விடுவித்து அழைத்துச் செல்ல இங்குள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

இந்திய மீனவர்கள் 120 பேர் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல இலங்கை மீனவர்கள் 36 பேர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக தூதரக அளவிலான பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலையில் இந்த விவரத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இது மிகவும் நுட்பமாக அணுக வேண்டிய பிரச்சினை. மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் புதிய பிரச்சினை கிடையாது. 

வெகு காலமாகவே இதை இரு நாட்டு அரசுகளும் அணுகி வருகின்றன. இத்தகைய நிலைமை தொடராமல் தவிர்க்க இலங்கை அரசுடன் தொடர்ந்து இந்தியா பேசி வருகிறது´ என்றார் விகாஸ் ஸ்வரூப். இதேவேளை சிறைகளிலுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இலங்கை வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.