Breaking News

அடேல் பாலசிங்கத்துக்கு எதிராகவும் யுத்தக்குற்றச்சாட்டுக்களாம்!



விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள உள்நாட்டு பொறிமுறை நீதிபதிகள் குழுவிற்கு முன்பாகவே இந்த முறைப்பாடு முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளில் புலம்பெயர் அமைப்பொன்று ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது வெளியிடப்படுள்ள குறித்த செய்தியில், அடேல் பாலசிங்கம் சிறுபராய சிறுமிகளை ஆயுதப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டமை மற்றும் அவர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்க விட்டமை என்பன குறித்த விடயங்கள் இந்த குற்றச்சாட்டில் உள்ளடக்கப்படவிருக்கின்றன. பத்துக் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவிருக்கின்றன.

இது தொடர்பாக நாங்கள் ஜெனீவா அமர்வின் போதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். ஆனால் யாரும் அதனை பொருட்படுத்தவில்லை என்று புலம்பெயர் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அடேல் பாலசிங்கம் தற்போது இங்கிலாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஊடகமானது தொடர்ந்தும் விடுதலைப்புலிகள் மற்றும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

மேலும், குறித்த ஊடகமானது வெள்ளைக்கொடி விவகாரம் பொய்யானது என செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.