Breaking News

தபால் ஊழியர்கள் 23 ஆம் திகதி முதல் போராட்டம்

நாடு முழுவதுமுள்ள தபால் துறை ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 23 ஆம் திகதி எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கங்களின் முன்னணி அறிவித்துள்ளது.

தபால் திணைக்களத்தில் நிலவும் முதலாம் தர மற்றும் இரண்டாம் தர தபால் நிலைய பொறுப்பதிகாரிகள் பதவிகள் 1800 இற்கும், இடைவெளியாகவுள்ள தபாலகர் பதவிகள் 1500 பேரை நியமிக்குமாறும் இந்த தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இத்துடன், 14 கோரிக்கைகளை சங்கங்கள் முன்வைத்துள்ளன.

அரசாங்கம் எப்போதும் தபால் திணைக்களத்தை இரண்டாம் பட்சமாகவே கவனிப்பதாகவும், தபால் திணைக்களத்துக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதை தள்ளிப் போட்டும் வருவதாக இச்சங்கங்களின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதனால், எதிர்வரும் 23 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

இதற்கு சமாந்தரமாக நாடு முழுவதிலும் 15 மத்திய தபால் நிலையங்களின் முன்னாலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளிக்காவிடின் நாடுமுழுவதிலும் தபால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்