Breaking News

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புளொட் செயலகத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் ஆரம்பித்த இந்தக் கூட்டத்தில், கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன்,

”ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. அதில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதன்மூலம் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கான பரிகாரம் கிடைக்குமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.

புதிய ஆட்சியாளர்களின் போக்கு வித்தியாசமானதாக உள்ளது. அவர்கள் எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அதுமட்டுமன்றி புதிய அரசாங்கம் ஐ.நா உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

ஐ.நா தீர்மானத்தை புதிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அவ்வாறான நிலையில் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து மேற்கொள்ளப்படும் நியாயமான செயற்பாடுகளுக்கு எம்மாலான பங்களிப்புக்களை வழங்க வேண்டும். அது மட்டுமன்றி இந்த தீர்மானத்திலுள்ள விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் வழங்க வேண்டும்.

ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியிருந்தார். அதன்போது அனைத்து தரப்பினரும் எழுத்து மூலமான நிலைப்பாட்டை வழங்குமாறு கோரியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போதும் அனைவருடைய கருத்துக்கள் தொடர்பிலும் கூடி ஆராய வேண்டியுள்ளது. நீண்டகாலமாக உள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை எட்டுவதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை குழப்பும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.

அனைத்து கருமங்களும் பக்குவமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் அரசாங்கத் தரப்பினருடன் பேச்சு நடத்தியுள்ளோம். அதன் அடிப்படையிலேயே அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பாக எதிர்வரும் 31ஆம் நாளில் இருந்து பாரிய குற்றமிழைத்தவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை விடுவிப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினர் எமக்கு உறுதியளித்துள்ளார்கள். அந்தச் செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும் பாரிய குற்றங்கள் இழைத்தவர்களாக யாராவது இனங்காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பாக தகவல்கள் பெறப்பட்டு அவர்களின் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட முடியும் என்பது தொடர்பாக மீண்டும் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.