Breaking News

பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டப்பட்ட அதிகாரி மன்னாருக்கு மாற்றம்

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்குப் பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீட்டுத் திட்டப் பயனாளியான கணவனை இழந்த பெண் ஒருவரால் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, திட்டத்தை நடைமுறைபப்படுத்தும் நிறுவனமான, இலங்கைசெஞ்சிலுவைச் சங்கம், உள்ளக விசாரணையை மேற்கொண்டிருந்தது.

இதன் அடிப்படையில் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, தமது தொழில் நுட்ப அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தது, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்.இந்த விசாரணை அறிக்கை மற்றும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவை தற்போது, பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்துவதா இல்லையா என்று அவரே முடிவு செய்வார் என்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்களை பொலிஸ் மா அதிபர் ஆராய்ந்து வருவதாக காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.அதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட செஞ்சிலுவைச் சங்க தொழில்நுட்ப அதிகாரி தற்போது மன்னாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.