போர்க்குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தினரை காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கை
போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இலங்கை இராணுவத்தினர் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட செலவுகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கமே, ஏற்றுக் கொள்ளவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ அதிகாரிகளிடம் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதற்காக வாக்குறுதியை அவர் கொடுத்துள்ளார்.ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக, இலஙகை இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர், இராணுவ அதிகாரிகளுக்கு ஐ.நா விநாரணை அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பாகவும், அவை பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்துள்ளார்.இதன்போதே, போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினருக்கான சட்ட செலவுகள் அனைத்தையும், அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்றும், அவர்களின் சார்பில் சட்டவாளரை நியமிக்கும் என்றும், சம்பிக்க ரணவக்க உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் படையினர் உண்மை நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில், ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கலாம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அத்தகைய ஒரு வழக்கு, மதத்தலைவர்களை உள்ளடக்கிய கருணைச் சபை முன் வரும் போது,அவருக்கு பொதுமன்னிப்புக்கு பரிந்துரை செய்ய முடியும்.
வெளிநாட்டுப் பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறையை எவ்வாறு உருவாக்குவது என்று, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே வெளிப்படுத்தப்படும்.இத்தகைய ஆலோசனைகளை வரும் ஜனவரிக்குள் முடிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது கலப்பு விசாரணை அல்ல. நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவ எமக்குத் தேவை.எவ்வாறாயினும், சிறப்பு சபை ஒன்றே இறுதியான தீர்மானத்தை எடுக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.








