Breaking News

ஜெனிவா தீர்மானத்துக்கு நியூசிலாந்தும் இணை அனுசரணை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதாக நியூசிலாந்தும் அறிவித்துள்ளது.

இலங்கையில், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைமைப்பில், அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மாதம் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை உள்ளிட்ட 12 நாடுகள் இணை அனுசரணை வழங்கியிருந்தன.இந்த நிலையில், இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாமல், கடந்த 1ஆம் நாள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இம்மாதம் 16ஆம் நாள் வரை, இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முடியும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மேலும் 26 நாடுகள், இணை அனுசரணை வழங்குவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இணை அனுசரணை நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்தது. இதனிடையே, நியூசிலாந்தும், இந்த இணை அனுசரணை நாடுகளுடன் புதிதாக இணைந்துள்ளதையடுத்து, தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.