Breaking News

கடினமான பாதையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளோம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வழிமொழிந்துள்ள நாடுகளுக்கு நன்றிகளை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முன்னெடுத்து கடினமான பாதையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதற்கான தக்க தருணமொன்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பு தமிழ் மக்களை பொறுத்தவரையில் இதுவொரு வரலாற்றுத் திருப்பமுனையாகுமென்றும் அரசாங்கம் வாக்குறுதிகளை நம்பகத்தன்மையுடன் நிறைவேற்றவேண்டுமெனவும் கோரியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்றைய அமெரிக்க பிரேரணை வாக்ககெடுப்பின்றி நிறைவேறியமையை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அச்சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் ஆதரித்திருக்கிறது.

முன்னதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தொடர்பாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததோடு பாரிய குற்றங்கள் தொடர்பாக கலப்பு விசேட நீதிமன்றம் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட அமெரிக்க பிரேரணையின் வரைபில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு சமர்பிக்கப்பட்டிருந்தது. அந்த மாற்றங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை வலுவிழக்கச் செய்திருப்பதாக கூறப்பட்டது.

அமெரிக்க பிரேரணையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தமை உண்மை தான். இருப்பினும் அப்பிரேரணையில் பல்வேறு முன்னேற்றகரமான விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொதுநலவாய மற்றும் வௌிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பகரமான தன்மை காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி அமெரிக்க தீர்மானத்தில் முதற் பந்தியிலேயே ஐக்கிய நாடுகளின் சிபார்சுகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளமை விசேடமானதாகும்.

எனினும் இப்பொறிமுறையானது எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பான வரைமுறைகள் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் விசாரணைகள் தொடர்பாக எவ்விதமான பொறிமுறைகள் உருவாக்கப்படுவதாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துடனும் முழுமையான ஏற்புடனே அமைக்கப்படவேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்துகின்றோம்.

அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக அமையவேண்டும். இலங்கை முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக மீளவுச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக 9 மாதங்களில் இலங்கை அறிக்கையொன்றை சமர்பிக்கவேண்டும்.அதன் பின்னர் 18 மாதங்களில் முழுமையான கலந்துரையாடலொன்று நடைபெறப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் செயற்பாட்டில் ஐ.நா.முழுமையான பங்களிபபு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அத்துடன் ஏனைய சர்வதேச தரப்புக்களின் பங்களிப்புக்களும் முழுமையாக இருக்க வேண்டும் என்றார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி வழங்கும் செயற்பாடுகள் உட்பட அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறுமாயின் அதற்கான பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்குமா என வினவியபோது, நீதிவழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடானது கூட்டுப்பொறுப்பு சார்ந்தது.

அதாவது சர்வதேசம், இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டுப்பொறுப்புடனேயே இந்தக் கருமங்கள் முன்னெடுக்கபடவிருக்கின்றன. ஆத்துடன் ஐ.நா, சர்வதேச நாடுகளின் பங்களிப்புக்களும் உள்வாங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.