பூரண ஹர்த்தால் : யாழ் மாவட்டம் ஸ்தம்பிதம்
யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுவரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ் மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது
சகல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைய யாழ் மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், பல்கலைக்கழம் என்பன மூடப்பட்டுள்ளதுடன், யாழ் நகரம் உட்பட யாழ் மாவட்டமே வெறிச்சோடி காணப்படுகின்றது.
யாழ் நகரில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹர்தாலை முன்னிட்டு விசேட அதிரடிப்படையினர், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஹர்தாலை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதில் பாதுகாப்பு தரப்பினர் மும்முரமாக தமது கடமைகளைச் செய்கின்றனர். எனினும் மக்களின் அத்தியாவசியமான வைத்தியசாலைச் சேவைகள் வழமைப்போல் இயங்குவதுடன், தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால் வெளிமாட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கான போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிடுகின்றார்.