தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - கம்மன்பில
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என தெரிவிக்கும் மஹிந்த ஆதரவு அணியினர் இந்த அரசாங்கத்தின் மோசமான செயற்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மஹிந்த அணியினரின் நிலைப்பாடு எவ்வாறு என ஊடகம் ஒன்றுக்க கருத்து தெரிவித்த அவ்வணியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
நல்லாட்சி என்ற பெயரில் இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான வகையிலேயே அமைந்துள்ளது. ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகளும், பயங்கரவாத செயற்பாடுகளும் உள்ளதென்பது தெளிவாகத் தெரிந்தது.
அதேபோல் பொதுத்தேர்தல் நடைபெற்ற சூழலிலும் முழுமையாக சர்வதேச தலையீடுகள் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புலம்பெயர் அமைப்புகளின் பின்னணி பலமாக உள்ளது.
அதேபோல் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள புலம்பெயர் அமைப்புகளை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் இலங்கையில் புலம்பெயர் அமைப்புகளின் மாநாட்டையும் நடத்த இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. அவ்வாறு இலங்கையில் புலம்பெயர் அமைப்புகளின் மாநாடு நடத்தவும் அவர்களின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தவும் அவர்களுக்கான முழு நிதியும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் மூலமாகவும் புலம்பெயர் புலி அமைப்புகள் மூலமாகவுமே கிடைக்கின்றன.
அவ்வாறு இருக்கையில் இப்போது தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.