Breaking News

வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது : கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை

மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா நேற்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். 

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

வருடம் நிறைவு பெற இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன.  இந்த நிலையில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டநிதியை முழுமையாக வடமாகாண சபை பயன்படுத்தவில்லை. வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆன நிலையிலும் செயலற்று காணப்படுகின்றது. இவ்வாறு செயலற்று கிடப்பதை விட மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். 

தேசிய மற்றும் உள்ளுர் பிரச்சினைகளுக்கு அறிக்கைகள் விடுகின்றோம். அதை செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே வடமாகாண சபையின் செயற்பாடுகள் மீது திருப்தி கொள்ளவில்லை. 

அத்துடன், இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்.மாவட்டத்திற்கு கொண்டு வராமல் வடமாகாண சபையினரே தடுத்து வைத்துள்ளனர் என்றும் அவர் அங்கு குற்றஞ்சாட்டினார். அந்த தண்ணீர் வான்களினால் கடலுக்கு திறந்து விடப்படுகின்றன. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு ஏன் தடை விதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.