இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிந்தது - ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புகிறது மே.இ.தீவுகள்
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இதுவரை இலங்கை அணி விளையாடிய 10 இருபதுக்கு 20 போட்டிகளில் ஒன்பது போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு போட்டியில் மாத்திரம்தான் வெற்றிபெற்றுள்ளது.
அதே நேரம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. காரணம் இதற்கு முன் விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்தியத்தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிங்கிய பிளெட்சர் மற்றும் சார்ள்ஸ் ஆகியோர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடத் தொடங்க 6 ஓவர்களில் 61 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
அதன்பிறகு 7ஆவது ஓவரை மிலிந்த சிறிவர்தன வீசினார். அந்த ஒவரின் இரண்டாவது பந்திற்கு முகம்கொடுத்த பிளெட்சர் 23 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்லன் சாமுவேல்ஸ்வந்த வேகத்திலேயே அதே ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு 34 ஓட்டங்களை பெற்று ஆடிக்கொண்டிருந்த சார்ள்ஸ், சிறிவர்தனவின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து சென்றார். 31 ஓட்டங்கள் பெற்று ஆடிக்கொண்டிருந்த பிராவோ மலிங்கவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்.
இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
163 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு டில்ஷான் மற்றும் குசல் ஆகியோர் தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இந்த ஜோடி சற்று அதிரடியாக ஆடி 2.4 ஓவர்களில் 23 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் 12 ஓட்டங்களுடன் குசல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு டில்ஷானுடன் ஜோடி சேர்ந்தார் ஷெஹான் ஜயசூரிய. இவர்களின் இணைப்பாட்டம் சற்று ஆறுதல் அளிக்க 30 ஓட்டங்களுடன் ஜயசூரியவும் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த சந்திமால் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் வந்த வேகத்திலேயே வெளியேறினர். டில்ஷான் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்ப 20 ஓவர்கள் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 23 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை இந்த வெற்றியோடு சமநிலையில் முடித்தது மேற்கிந்தியத்தீவுகள்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீசிய பிராவோ 4 விக்கெட் டுக்களையும் ராம்போல் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.