கேப்பாபுலவு முகாம் கேப்பாபுலவு கிராமமாக பெயர் மாற்றம்
ஐ.நா செயற்குழுவின் இலங்கைக்கான விஜயத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டப்பட்ட முகாம் இரவோடு இரவாக கேப்பாபுலவு கிராமம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமம் அபகரித்துள்ள இலங்கை படையினர் கிராமம் முழுவதும் இராணுவ முகாமிட்டு தங்கியுள்ள நிலையில் கிராம மக்கள் கேப்பாபுலவை அண்டிய காட்டுப் பகுதியில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.
குறித்த பகுதியில் வீடுகள் அமைத்துக் குடியேற்றப்பட்டபோதும் தமக்கு வளம் மிக்க தமது சொந்த கிராமமே வேண்டும் என்றும் அங்கு தம்மை மீள்குடியேற்றுமாறும் அந்த மக்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
காலம் காலமாக தாம் வசித்து வந்த நிலமே தமக்கு வேண்டும் என்றும் தமது உழைப்பினால் பயன்தரும் அந்த கிராமத்தின் பயன்களை இன்று இராணுவமே அனுபவிப்பதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் குடியேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக ஜெனீவாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்த விடயம் உள்ளடங்கிய போதும் கேப்பாபுலவு போன்ற பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமல் வாழ்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த முகாமில் வைக்கப்பட்டடிருந்த கேப்பாபுலவு மாதிரிக் கிராமம் என்ற பெயர்பலகையை மாற்றி கேப்பாபுலவு கிராமம் என்று காட்டுவதன் ஊடாக கேப்பாபுலவு அபகரிப்பை மூடி மறைக்க படைகள் முயற்சிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மிடமே தமது நிலத்தை ஒப்படைக்குமாறும் தமது கிராமத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறும் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நா செயற்குழுவிடம் தாம் வலியுறுத்தப் போவதாக கேப்பாபுலவு மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள குறித்த நடவடிக்கையை முறியடித்து தம்மை ஐ.நா செயற்குழுவை சந்திக்கவும் தாம் இன்னமும் அகதிகளாக வாழ்வை எடுத்துரைக்கவும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.