Breaking News

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம் (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், இலங்கை இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நேற்று பிற்பகல், இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் அரிந்தம் பக்சி, இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்திய இராணுவத் தளபதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.கொழும்பு வந்து சேர்ந்ததும், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், முதலாவதாக, பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதேவேளை, இலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன் அவர் வடக்கில் உள்ள இலங்கை படைத்தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்களுக்கும் செல்லவுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளுக்கும் செல்லவுள்ள இந்திய இராணுவத் தளபதி, பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

1987ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய அமைதிப்படையில் கொம்பனி தளபதியாக ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.