கைதிகளை பிணையில் விடுவிப்பதாகக் கூறுவது சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றுவதற்கே!- சுரேஷ்
தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிப்பதாகக் கூறுவது சர்வதேசத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கே. இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிணையில் விடுவிக்கப்பட்ட கைதிகளில் 6 பேர் போதைவஸ்து பாவனையில் ஈடுபட்ட சிங்கள கைதிகள் என்றார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகள் பலதரப்பட்ட சிறைச்சாலைகளிலும் உணவு தவிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களில் புதிய மகசின் சிறைச்சாலையிலுள்ள 14 அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பலாத்காரமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் உடையார் கட்டைச் சேர்ந்த ரைகஸ், முல்லைத்தீவு நிசாந்தன், யாழ்ப்பாணம் கோபிநாத், வல்வெட்டித்துறை துஷா ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி போகம்பறை சிறைச்சாலையில் மாத்தளையைச் சேர்ந்த ரமேஷ்குமார், கிளிநொச்சி ஐனேசன், மாத்தளை செல்வகுமார், சுரஜித், சிவகுமார் யோகராஜா, மனோகரன், ரூபச் சந்திரன், சுப்புராஜா, விக்கிரமசிங்க (இராணுவம்) தேவராஜா, சுந்தரமணி, இளங்கோ ஆகியோர் இயலாத நிலையில் வைத்தியர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிகிச்சைக்காக வற்புறுத்திய போதும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக நீடித்து வருகின்ற நிலையில் சிகிச்சையையும் மறுத்து வருகிறார்கள். ஏற்கனவே இவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பலவீனமடைந்தவர்களாக இருக்கிறார்கள். நேற்றுமுன்தினம் 28 தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவித்ததாக கூறிய நிலையில் இவர்களில் 6 பேர் கொலை, கொள்ளை, கடத்தல், போதைவஸ்து பாவனை தொடர் பில் கைது செய்யப்பட்டு தடுப் பில் இருந்தவர்களாவர். விடுதலை செய்யப்பட்டுள்ள வர்கள் 26 ஆண்கள், 2 பெண்களாவர்.
இவர்கள் ஒன்றரை வருடங்களுக்குள் குறிப்பாக புதிய அரசின் ஆட்சிக்கு பின்பும் ஆட்சிக்கு முன்பாகவும் பிடிக்கப்பட்டு சிறைக்குச்சென்றவர்கள். சட்டமா அதிபர் இவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் கைதிகளை விடுவிப்பதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றார்.