அரசு வாக்குறுதியை நிறைவேற்ற தவறியமை ஏமாற்றமளிக்கிறது - மாவை கண்டனம்
தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை அளிப்பது தொடர்பாக அரசாங்கம் எமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியமை ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றுமுன்தினம் தமிழ் அரசியல் கைதிகள் 31 பேருக்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பிரேரணையை அடுத்து வழங்கப்பட்ட பிணை அனுமதி மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஆட்பிணை நிபந்தனை தொடர்பிலும் சிறைச்சாலைகளில் தொடர்ந்தும் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மிகக் கொடூரமான ஜனநாயக விரோத சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் ஆட்சியிலுள்ள அரசாங்கத் தரப்பினரிடமும் சர்வதேசத்திடமும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தல்களை செய்திருந்தோம்.
எனினும் கடந்தகால ஆட்சியாளர்கள் விடுதலையளிப்பதாக வாக்குறுதிகளை வழங்கியபோதும் அது தொடர்பில் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.
தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்த முனைந்த சர்வாதிகார ஆட்சியொன்று கடந்த ஜனவரி 8ஆம் திகதி சிறுபான்மை மக்களின் பங்களிப்புடன் அகற்றப்பட்டது.அதன் பின்னர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போதும் புதிய ஆட்சியொன்று உருவாகியது. வட, கிழக்கு மக்களின் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எமது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருகின்றோம். அதேநேரம் கடந்த அரசிலிருந்து புதிய அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மாறுபட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் அழுத்தங்களை பிரயோகித்து வந்தோம். எனினும் அரசாங்கத்தின் காலதாமதமான செயற்பாடுகள் காரணமாக தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த மாதம் 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை அரசாங்கத் தரப்பினரிடம் தெரிவித்து அவர்களின் விடுதலையை நாம் வலியுறுத்தியிருந்தோம்.
அதன் பலனாக ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் உரிய பொறிமுறைகள் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னதாக அரசியல் கைதிகள் விடயத்திற்கு நிரந்தர தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதியமைச்சர் விஜயதாஸ முன்னிலையில் கூட்டமைப்பின் தலைமையிடம் உத்தரவாதம் அளித்திருந்தார். இதனையடுத்து எமது தலைவர் சிறைச்சாலைக்கு நேரடியாகச் சென்று அந்த உத்தரவாதத்தை கைதிகளுக்கு தெரிவித்து உண்ணாவிரதத்தை நிறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்பினரை தனித்தனியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் சந்தித்து கைதிகளின் விடுதலை தொடர்பாக வலியுறுத்தினோம்.
இதன்போது தீபாவளிக்கு முன்னதாக 30 பேருக்கு பிணையளிப்பதாகவும் 20 ஆம் திகதிக்கு முன்னதாக 32 பேருக்கு பிணை வழங்குவதாகவும் ஏனையோர் தொடர்பில் அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்து சட்ட மா அதிபர் திணைக்களத்தோடு இணைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
அத்துடன் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனையளிக்கப்பட்ட 48 பேருக்கும் பொதுமன்னிப்பளிப்பது தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருந்தோம். அதன்போது ஒரு சில நாட்களில் அது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். எனினும் விடுதலை தொடர்பான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக அமையாததன் விளைவாக அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி முதல் இடைநிறுத்தியிருந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்திருந்தனர்.
ஏமாற்றம்
இந்நிலையில் இவர்களின் விடுதலை தொடர்பாக நாம் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்க உயர்மட்டத் தரப்பினருடன் பல்வேறுபட்ட வழிகளில் பேச்சுக்களை நடத்தினோம். தீபாவளிக்கு முன்னதாக ஒரு தொகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டபோதும் அச்செயற்பாடு நடைபெற்றிருக்கவில்லை. நேற்றைய தினம் முதற்கட்டமாக ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கான பிணை அனுமதி கோரப்படும் போதும் சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார். அவ்வாறிருக்கையில் நேற்றுமுன்தினம் காலை நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட அரசியல் கைதிகளுக்கான பிணை அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினருடன் நாம் பேச்சுக்களை முன்னெடுத்தோம்.
அதனைத் தொடர்ந்து சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நகர்த்தல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு 31 கைதிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டு 10 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு ஆட்பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஆட்பிணைக்கான கையொப்பமிடுவதற்கு அவர்களுக்கு யாரும் இல்லாததன் காரணமாக மீண்டும் அவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் செயற்பாடு மிகவும் கவலையளிப்பதும் கண்டிக்கத்தக்கதுமாகும். தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பிலோ அல்லது நிபந்தனையற்ற ரீதியிலோ விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலைப்பாடாகும். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு எமக்கு ஏமாற்றமளிக்கின்றது. அவர்கள் எமக்களித்த வாக்குறுதிகளின் பிரகாரம் நடந்துகொள்ளவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் காரணங்களுக்காகவே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் தற்பொழுது சிக்கலான முறையில் பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும்
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை இவ்வாறு நீண்டு செல்வதற்கு நாட்டில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமே காரணமாக இருக்கின்றது. இந்தச் சட்டத்தின் பிரகாரம் பொலிஸார், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சட்ட மா அதிபர் திணைக்களம் போன்ற தரப்புக்களுக்கு அதிகாரங்கள் உச்ச அளவில் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரின்போது அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை நிலைநாட்டுவதாக குறிப்பிட்டதோடு நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது.
அத்துடன் தேர்தல் காலங்களிலும் இதையொத்த கருத்துக்களை தெரிவித்து சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. ஆகவே அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அளித்த வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்தக் கொடூர சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் காலம் நீண்டு செல்கிறது. தொடர்ந்தும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன்நீக்கி அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என நாம் அரசாங்கத்தை மிகக் கடுமையாக வலியுறுத்துகின்றோம் என்றார்.