“சாவின் விளிம்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்”(காணொளி)
அரசியல் கைதிகளின் மன அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உள்ளதாக அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களால் “சாவின் விளிம்பில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வேண்டுகோள்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் என்ற வகையில் தற்போது சிறையில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
67 வருட காலமாக இலங்கை அரசியலில் ஆட்சிப் பீடம் ஏறும் அனைத்து சிங்கள பேரினவாத அரசாங்கங்களும் தமிழ் இனத்தை போலி வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றும் அரசியல் தந்திரங்களை மட்டுமே கையாள்கின்றனர்.
அரசியல் கைதிகளாகிய நமக்கு எமது விவகாரத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமையினை நம்ப வைத்துக் கழுத்தறுத்து இந்த நல்லாட்சி அரசிடம் இன்னும் சுமூகமான உறவினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்வதன் பின்புலம் என்ன?
பேரம் பேசும் சக்தியினை எமக்களியுங்கள் என்று கூறி வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை அரசிடம் பேசிய பேரங்கள் என்ன?
நமது மாண்பு மிகு வடக்கு முதலமைச்சர் அண்மைக்காலத்தில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்த கருத்து சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணப்பெட்டிகளை ஆட்சியாளர்களிடம் பெற்றிருந்தனர் என்பதை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தனர்.
இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசிய பேரமா என தமிழ் மக்கள் அனைவரையும் என்ன வைக்கின்றது.
ஒரு அரசியல் கைதியேனும் உயிரிழக்க நேரிட்டால் அற்கான முழுப் பொறுப்பையும் நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி இந்த அரசை ஆட்சிப்பீடமேற்றி தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரே ஏற்க வேண்டும்.
இந்த ஊடக சந்திப்பில் எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நாம் அதனை முழு அளவில் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். மீண்டும் எம்மீது பொய்யாக குற்றங்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்படலாம்.
எங்கள் பிணை ரத்தாகலாம் மீண்டும் சிறையிலடைக்கப்படலாம். ஆனாலும் சிறையில் சாவோடு போராடும் எமது சக அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலைக்காக நாம் எதனையும் எதிர்கொள்வோம் என பிணையில் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்புடைய செய்திகள்








