Breaking News

வடக்கில் அமைதியான நினைவுகூரல் நிகழ்வுகள் - எவரும் கைது செய்யப்படவில்லை

வடக்கில் மாவீரர் தினம் மிகவும் அமைதியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் சட்டத்தை மீறியமைக்காக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை நல்லூர் கோவிலில் உயிரிழந்த தமது உறவுகளுக்காக சிலர் விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தியதாக சுட்டிக்காட்டிய பேச்சாளர் இது அவர்களின் தனிப்பட்ட விடயமாதலால் பொலிஸார் இதில் தலையிடவில்லை என்றும் விளக்கமளித்தார்.

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. என்ற போதும் எல். ரி.ரி. ஈ. அமைப்பினை முன்னிலைப்படுத்தி எவ்வித ஆர்ப்பாட்டங்களோ ஊர்வலங்களோ நிகழ்ச்சிகளோ பிரசித்தமான முறையில் முன்னெடுக்கப்படாமையில் பதற்றமான சூழ்நிலை காணப்படாததுடன் எவரையும் கைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லையெனவும் அவர் கூறினார்.

இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் மாவீரர் தினத்தை வடக்கில் முன்னெடுப்பதற்கு தமிழர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் சட்டத்தை மீறும் வகையில் எல். ரி.ரி. ஈ. பயங்கரவாத அமைப்பை முன்னிலைப்படுத்தி பிரசித்தமான முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் பேச்சாளர் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.