Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை அவசியமானது : இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை

சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டு நாட்டின் ஜனநாயகம் மறுசீரமைக்கப்படல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமகாலத்தில் தோன்றியுள்ள அரசியல் கைதிகளின் நெருக்கடி நிலை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் ஜனநாயக, அரசியல், சட்ட மறுசீரமைப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு உறுதிபூண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு மக்கள் தமது வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கியிருந்தனர்.

மேலும், ஜனாதிபதி அவர்கள் வடக்கு கிழக்கு மக்கள் வழங்கிய ஜனநாயக மறுசீரமைப்பிற்கான ஆணையைக் கருத்திற் கொண்டு நிபந்தனை இன்றி சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களால் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முன்னெடுக்கப்படும் சகல ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டங்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

கைது செய்து சிறைப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யும் படியும், மேலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் உயர் பாதுகாப்பு வலயத்தை இல்லாது செய்து அப்பிரதேசத்தை உரிமையாளர்களுக்கு வழங்கும் படியும், சிவில் நிர்வாக அமைப்பினுள் இடம்பெறும் இராணுவத் தலையீட்டை நிறுத்தும்படியும், கடந்த ஜூன் 26ஆம் திகதி மன்னாரில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 58 வது பேராளர் மாநாட்டில் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்தோடு, கற்றுக் கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் 9.70 பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலப் பரிந்துரையில், அரசியல் கைதிகளின் விடுதலை குறிக்கப்பட்டிருந்தும் அரசினால் அது இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும் மற்றும் மனிதாபிமான சட்டத்திற்கும் முரணாக இந்த அரசியல் கைதிகள் நீண்ட நாட்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

வட கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த சகல அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுவிப்பதற்கும் பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் சர்வதேச சட்டவாயத்தின் உள்ளக பொறிமுறை விசாரணையில் நம்பிக்கை கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம், சர்வதேச ரீதியாக குற்றவியல் நடவடிக்கைகளில் பின்பற்றப்படும் நியமங்களை மீறுவதோடு, மனித உரிமைகளை மேம்படுத்துவதில் தடையாகவும் இருந்து வருகின்றது.

அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச கட்டுறுத்தலுக்கு எதிரானவையும் ஆகும்.

ஆகவே, இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி இக் கைதிகளை தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் பங்குகொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைஆசிரியர் சங்கம் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.