Breaking News

தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்: 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி



ஐந்தாவது நாளாக இன்றும் தமிழ் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 143 தமிழ் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மகசீன், மட்டக்களப்பு, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் கைதிகளே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் தடுத்து வைத்துள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று(புதன்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்ட 31 கைதிகளும் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலா பத்து இலட்சம் ரூபா சரீர பிணையில் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இவர்களுக்கு பிணைதாரர் இல்லாமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிணைதாரர் ஆஜராகும் பட்சத்தில், பிணை வழங்கப்பட்டுள்ள 31 கைதிகளும் தங்களின் வீடுகளுக்கு அனுப்பபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கைதிகளில் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 கைதிகளும் இன்று காலை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

உண்ணாவிரதத்தின் போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.