அரசியல் கைதிகள் விடுதலைக்காக வடக்கு, கிழக்கில் இன்று முழுஅடைப்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ள இந்தப் போராட்டத்துக்கு, ஈபிடிபி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று காலை தொடக்கம், மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ள இந்தப் போராட்டத்தினால், வடக்கு கிழக்கு பிரதேசங்கள் முழுமையாகச் செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த, பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள்,வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்துச் சேவைகள், வங்கிச் சேவைகள் உள்ளிட்ட ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபை, சர்வமத தலைவர்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், கல்விச் சமுகம், பல்கலைக்கழக சமுகம், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
உணர்வு பூர்வமாகவும், அமைதியான முறையிலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்குமாறு, அரசியல் தலைவர்களும், அமைப்புகளும், வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதேவேளை, இன்று நடத்தப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை, பொதுச்சொத்துக்கள், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.இன்று நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்தினால், அவரது இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.