கோத்தாவை கைதுசெய்ய விடமாட்டேன் என்று கூறுவதற்கு விஜயதாஸ யார்?- ராஜித கேள்வி
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்ய விடமாட்டேன் என்று கூறுவதற்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ யார்? அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? அவர் அதனை தீர்மானிக்க முடியுமா? அப்படியானால் எதற்கு நீதிமன்றம் இருக்கின்றது. நீதி அமைச்சர் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியுமா? என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
நாட்டின் பிரதம நீதியரசருக்கே இவ்வாறு கூற முடியாது. நீதி அமைச்சர் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியுமா? அப்படியானால் நீதிமன்ற கட்டமைப்பு இருப்பதன் அர்த்தமென்ன.? இவ்வாறு விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணைக்கு கூறும் தமிழர் தரப்பின் கோரிக்கை நியாயமாகின்றது அல்லவா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
எவன்ட் கார்ட் விவகாரம் குறித்த கலந்துரையாடலின்போது எதுவும் பேசாத விஜயதாச ராஜபக்ஷ வெளியில் வந்து கருத்து வெளியிடுவதில் என்ன அர்த்தம்? மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்க முடியாமல் விஜதாச ராஜபக்ஷ ஐ.தே.க.வுக்கு கட்சி மாறியவர். ஆனால் நாங்கள் மஹிந்தவை கவிழ்த்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:-
கேள்வி:- எவன்காட் விவகாரம் தொடர்பில் புதிய நிலைமை என்ன?
பதில்:- அது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே, அதாவது எவன்காட் நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் கடைப்படையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படுவதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினர் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதன் போது எவன்காட் விவகாரம் தொடர்பில் முழுமையான விளக்கமளிக்கப்பட்டது.
கேள்வி:- இவ்வாறு கடற்படையினருக்கு, எவன்காட் நிறுவன செயற்பாடுகளை வழங்கவில்லையென அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளாரே?
பதில்:- விஜயதாஸ ராஜபக்ஷ எவ்வாறு இதனை கூறமுடியும். அவர் இந்தக் கூட்டத்தில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லையே? அப்படியாயின் கலந்துரையாடலின் போது அவர் கருத்து வெளியிட்டிருக்கலாமே? கலந்துரையாடலின் போது எதனையும் கூறாமல் வெளியில் வந்து இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது அர்த்தமில்லைதானே. அவர் எப்படி இந்த விடயத்தை வெளியில் கூற முடியும்?
கேள்வி:- கட்சி மாறி பயந்துகொண்டு செயற்பட முடியாது என்று விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளாரே?
பதில்:- விஜயதாஸ ராஜபக்ஷவும் கட்சி மாறியவர்தானே, அவர் தானே முதலில் ஐ.தே.க.வுக்கு தாவினார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்க முடியாமல் ஐ.தே.க.வுடன் இணைந்து கொண்டவர்தான் விஜயதாச ராஜபக்ஷ. அன்று அவர்களினால் மஹிந்தவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை. ஆனால் நாங்கள் கவிழ்த்தோம். ஆனால் எங்களுக்கு முன்னரே விஜயதாச கட்சி மாறிவிட்டார். அவர் எங்களைப் பற்றி பேச முடியாது.
கேள்வி:- ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவில்லை. ?
பதில்:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அலரி மாளிகையில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வு காரணமாக பிரதமர் வரவில்லை. எனினும் அலரி மாளிகை நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதி தலைமையிலான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் நாங்கள் ஜனாதிபதி தலைமையில் கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை எடுத்தோம்.
கேள்வி:- எவன்காட் விவகாரத்தை கடற்படையினால் எடுத்து நடத்த முடியாது என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளாரே?
பதில்:- இல்லை. கடற்படையினரால் அதனை எடுத்து நடத்த முடியும். ஏற்கனவே கடற்படையினர் தான் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். இடைநடுவில்தான் எவன்காட் நிறுவனம் வந்தது. எனவே கடற்படையினால் செய்ய முடியும். அத்துடன் கடற்படை தளபதியும் ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடலின்போது நீண்ட விளக்கத்தை அளித்தார். சட்டமா அதிபரின் சார்பாக வந்த பிரதிநிதியும் இவ்வாறு கடற்படையின் கீழ் கொண்டு செல்வது சிறந்தது என்று கூறினார்.
கேள்வி:- எவன்காட் தொடர்பாக நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உங்களின் பேச்சை ஒருவர் ஒலிப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவர் யார்?
பதில்:- நீங்கள் ஊடகவியலாளர்கள் புலனாய்வு செய்து அதனை கண்டுபிடியுங்கள்.
கேள்வி:- ஊடகமொன்றும் இதனுடன் தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்:- செய்திகளை பார்க்கும் போது அவ்வாறு தோன்றுகிறது.
கேள்வி:- மாலைதீவில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் எவன்காட் விவகாரம் தொடர்பு படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா?
பதில்:- இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. உண்மையில் இந்த ஆயுதக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்காகவே அனுமதி பெறப்பட்டது. ஆனால் கப்பல் காலித் துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பலில் இருந்த கெப்டன் யார் என இலங்கை தரப்பில் கோரப்பட்டபோது இலங்கையர் ஒருவரின் பெயர் கூறப்பட்டது. கப்பலில் இருந்த ஆயுதங்கள் தொடர்பிலும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டன. எனினும் கப்பலில் சென்று பார்த்தபோது 550 ரி. 56 ரக துப்பாக்கிகள் உட்பட 816 ஆயுதங்கள் அதில் இருந்தன. அது மட்டுமன்றி மாலைத்தீவு கடற்பரப்பின் ஊடாக இந்த கப்பல் வந்தபோது அதன் ஜி. பி.எஸ். இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தான் மாலைதீவு அசம்பாவிதம் இடம் பெற்றுள்ளது.
எக்காரணம் கொண்டும் கப்பலில் ஜி.பி.எஸ். இயந்திரத்தை நிறுத்த முடியாது என்பதை கடற்படைத் தளபதியும் கூறியுள்ளார். மேலும் ஒரு துறைமுகத்திலிருந்து இன்னொரு துறைமுகத்திற்கு கப்பல் புறப்படும் போது சென்றடையும் துறைமுகத்திடம் அனுமதி பெறவேண்டும். இந்த எவன்காட் கப்பல் விவகாரத்தில் அந்த அனுமதியும் பெறப்படவில்லை. அதுமட்டுமன்றி கப்பலில் காணப்படுகின்ற ஆயுதங்கள் தொடர்பாகவும் உரிய பதிவுகள் இல்லை. அதனால் தான் பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் தவறு செய்துள்ளதாக நாங்கள் கூறுகிறோம்.
அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார். எனவே தான் கோத்தபாய ராஜபக்ஷ தவறிழைத்துள்ளதாக கூறுகின்றோம். சுமார் 3000 ஆயுதங்களுக்கு உரிய பதிவுகள் இல்லை. மேலும் அனுமதிப்பத்திரங்களும் பெறப்படவில்லை. ரக்னா லங்கா நிறுவனத்திற்கு அனுமதிப்பத்திரம் பெறாமல் ஆயுதங்களை வழங்கலாம். ஆனால் எவன்காட் நிறுவனத்திற்கு ஆயுதங்களை வழங்கும் போது அனுமதி பத்திரம் பெறவேண்டும். இங்கு அவ்வாறான அனுமதியும் பெறவில்லை. மேலும் 43 ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் தான் இவை தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
கேள்வி:- தவறுகள் இருப்பின் திலக் மாரப்பனவும், விஜயதாஸ ராஜபக்ஷவும் ஏன் இந்த விடயத்தை பாதுகாக்க முற்பட்டனர் ?
பதில்:- அதனை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவ்வாறு பேசுகின்றவர்கள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தின் போது எதனையும் கூறவில்லை. ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுப்பதில் மாத்திரம் பலனில்லை. உரிய இடத்தில் உரிய கருத்தை வெளியிடவேண்டும் என்பதே அவசியமாகும்.
கேள்வி:- அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவும் உங்களின் கூற்றை எதிர்த்திருந்தாரே?
பதில்:- அவரின் அரசியல் அறிவு அவ்வளவுதான். இவர்களைப் போன்றவர்களும் அவ்வப்போது அரசியலுக்கு வருவதுண்டு.
கேள்வி:- கோத்தபாய ராஜபக்ஷவை கைது பண்ண விடமாட்டோம் என்று அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ளாரே?
பதில்:- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய விடமாட்டோம் என்று கூறுவதற்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ யார்? அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உள்ளது? அவர் அதனை தீர்மானிக்க முடியுமா? அப்படியானால் எதற்கு நீதிமன்றம் இருக்கின்றது. நாட்டின் பிரதம நீதியரசருக்கே இவ்வாறு கூற முடியாது. நீதி அமைச்சர் இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க முடியுமா?
அப்படியானால் நீதிமன்ற கட்டமைப்பு இருப்பதன் அர்த்தமென்ன.? இவ்வாறு விஜயதாஸ ராஜபக்ஷ கூறுவதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணைக்கு கூறும் தமிழர் தரப்பின் கோரிக்கை நியாயமாகின்றது அல்லவா? அதாவது இவ்வாறு அமைச்சர்கள் நீதி விடயங்கள் குறித்து தீர்மானம் எடுக்க முடியுமாயின் உள்ளக விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் என்ற கருத்து வலுப்பெறும் சாத்தியம் உள்ளது.
கேள்வி:- முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளார் கோத்தபாய ராஜபக்ஷவை பாராட்டியவர்கள் இப்போது தூஷிப்பதாக உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றதே?
பதில்:- அப்படியாயின் முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளார் கோத்தபாய ராஜபக்ஷவை தூஷித்தவர்கள் இப்போது காப்பாற்ற முயலுகின்றனரே.? நான் அரசாங்கத்தில் இருக்கும் போது கோத்தபாய ராஜபக்ஷவை விமர்சித்தவன். யுத்தம் செய்த கோத்தபாய ராஜபக்ஷ சிறந்த மனிதர். ஆனால் யுத்தத்தின் பின்னர் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ தவறுகளை இழைத்தார். இதனை நான் முன்னரே அச்சமின்றி கூறியவன். பலர் அவருக்கு எதிராக எதனையும் கூறாமல் இருந்த காலத்தில் நான் அதனை பகிரங்கமாக கூறியவன். நான் பயப்படவில்லை.
கேள்வி:- இவ்வாறான பின்னணியில் தற்போதைய நிலைமையில் கோத்தபாய ராஜபக்ஷ என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
பதில்:- கோத்தபாய ராஜபக்ஷ ஒரு புத்திசாலி, எனவே அவருக்கு உண்மை தெரிந்ததால் அவர் மௌனமாக இருக்கின்றார். ராஜபக்ஷ மார்களில் கோத்தபாய ராஜபக்ஷ ஒரு அறிவாளி என்றுதான் கூறவேண்டும். எது தவறு, எது சரி என்பது அவருக்கு தெரியும். அவர் மற்றவர்களை போன்றவரல்ல. எனவே அவருக்கு அனைத்தும் தெரியும்.
கேள்வி;- எக்னெலிகொட விவகாரத்தையும், இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தாரே?
பதில்:- எக்னெலிகொட மற்றும் ரவிராஜ் விவகாரத்தில் ஆறு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய ஆயுதங்கள் வேறு சிலரிடமிருந்ததே இந்த இராணுவ அதிகாரிகள் கைதுக்கு காரணமாகும். இந்நிலையில் ஆறு ஆயுதங்கள் அனுமதியின்றி வேறு சிலரிடமிருந்தமைக்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்படுவார்களாயின் 3000 ஆயுதங்கள் அனுமதியின்றி விநியோகித்தவர்கள் சுதந்திரமாக இருக்க முடியுமா? இது தவறுதானே! அதற்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமல்லவா? இவற்றுக்கான உத்தரவைப் பிறப்பித்தவர் தவறு செய்துள்ளார் தானே. ? அப்படி பார்க்கும்போது இதற்கான உத்தரவை பிறப்பித்தவர் தவறு இழைத்துள்ளார் தானே? அதனை மறைக்க முடியுமா? அப்படி பார்க்கும்போது அக்காலத்தில் இதற்கான உத்தரவை முன்னாள் பாதுகாப்பு செயலாளரே விடுத்திருக்கவேண்டும். அதனால்தான் கோத்தபாய ராஜபக்ஷ தவறிழைத்துள்ளதாக நாங்கள் கூறுகின்றோம்.
எனவே தான் அரசாங்கம் மாறினாலும், அரசு இன்னும் மாறவில்லையென நான் அடிக்கடி கூறுகின்றேன். இப்பொழுதுதான் அரசையும் மாற்றிவருகிறோம். நேற்றிரவு (நேற்று முன்தினம் இரவு) அரசை குறிப்பிடத்தக்களவு மாற்றியிருக்கிறோம்.
கேள்வி:- இவ்வாறு பாரிய தவறுகள் எவன்காட் விவகாரத்தில் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அந்த விவகாரத்தை பாதுகாப்பதற்கு இரண்டு அமைச்சர்கள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எதிராக என்னசெய்யப் போகின்றீர்கள் ?
பதில்: அதனை ஊடகங்களே பார்க்கவேண்டும் நாங்கள் விமர்சனம் செய்து விட்டு இருந்து விடுவோம். ஊடகங்களே அதனை கிளரவேண்டும்.