அரசியல் கைதிகள் விடுதலை அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது! மகிந்த
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை வழங்கியதை கடுமையாக எதிர்த்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இதன் மூலம் நாட்டு மக்களிடையே அச்சநிலை தோன்றியிருப்பதாக கூறியுள்ளார்.
அத்துடன் நாகதீபத்தை நயினாதீவாக பெயர் மாற்றும் யோசனை வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கும் எதிர்ப்பை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, வடமாகாணத்தில் எதிர்காலத்தில் இப்படியான மேலும் பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிவித்தார்.
ஹொரனை பிரதேசத்திற்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒரு கொள்கை இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலர் இன்னும் சிறைச்சாலைகளில் உள்ளனர். அவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சிலரை விடுவிப்பதன் மூலம் நலன் என்ன?
அவ்வாறு விடுதலை செய்ய வேண்டுமாயின் வழக்கு இல்லாதவர்களுக்கு வழக்கு தாக்கல் செய்து, சட்டரீதியில் அனைவரையும் விடுவிக்க வேண்டும். எவ்வாறாயினும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டு மக்களிடையே பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.
நாகதீபத்தை நயினாதீவாக மாற்றுவதற்கு யோசனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவ்வாறு நினைத்தபடி அதனை பெயர்மாற்றம் செய்ய முடியாது. வடமாகாணத்தில் இதுபோன்ற பல மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படும்- என்றார்.