Breaking News

தங்கமகன் - சினிமா விமர்சனம்

நேர்மையான (போலீஸ் அல்ல..!)
அப்பாவின் பேரைக் காப்பாற்றப் போராடும் `தங்கமகன்'! `தனிக்குடித்தனம்தான் வேண்டும்’ எனச் சொன்னதும் கேர்ள் ஃப்ரெண்டையே அன்ஃப்ரெண்ட் செய்யும் நல்ல மகன் தனுஷ். பின்னர் சோகம் மறந்து, தாடிக்குப் பதில் மீசை வளர்த்துக்கொண்டு வீட்டில் பார்த்த சமந்தாவைத் திருமணம் செய்கிறார். 

தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிகுமாரின் ஞாபகமறதி அவரை ஒரு பிரச்னையில் சிக்கவைக்க, செய்வதறியாது தற்கொலை செய்துகொள்கிறார். வருமானம் இன்றி குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, அப்பாவுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறிகிறார் தங்கமகன். அட... ஆங்கிரி ஃபேமிலிமேன் தனுஷ்! `மாரி’யில் இருந்து தலைகீழாக மாறி நிற்கிறார் மனிதர். பாச மகன், குறும்புக் காதலன், சின்சியர் கணவன், கலாய் நண்பன்... என ஹவுஸிங் போர்டு குவார்ட்டஸுக் குள்ளேயே மொத்த ஸ்கோரிங்கையும் முடித்துக்கொள்கிறார். 


 

அதிலும் அதார் உதார் ஆக்‌ஷன் குறைத்து, ஜில் ஜிலீர் முத்தக் காட்சிகளிலேயே முழு முனைப்பையும் கொட்டியிருக்கிறார் கொலவெறி பையன். சொன்னதைச் செய்யும் மருமகளாக சமந்தா அவ்ளோ அடக்க ஒடுக்கம். ஜாலியாக அலுத்துக்கொண்டே ‘லவ் யூ... லவ் யூ’ சொல்லும்போது அவ்ளோ லவ்லி. முதலில் கோயில், பின்னர் பப், அப்புறம் மொட்டை மாடி பீர், பிறகு ரயில் வருடல்கள்... எந்தச் சூழ்நிலையிலும் காதலும் காதல் நிமித்தமுமாக முத்தம் விதைத்துக்கொண்டே இருக்கிறார் ஏமி. 


பின்பாதியில் கணவனைச் சீண்டும்போதும்... சீன்! ராதிகா, ஜெயபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் என தட்டச் சொன்னால் வெட்டிவரும் கூட்டத்தை மொத்தமாகப் பிடித்துவிட்டார்கள். இதற்கு நடுவில் சிக்கிமுக்கி வசனங்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் ஜூனியர் சின்னிஜெயந்த் போல இருக்கும் சதீஷ். தடதடவெனக் கடந்துவிடுகிறது முன்பாதி. அந்தப் பின்பாதி..?! ஆவ்வ்வ்..! இன்ஜினீயரிங் மாணவர்களின் பல்ஸ் பிடித்த வி.ஐ.பி டீமா இது? பிரசவ வலி மனைவி, முன்னாள் காதலனைக் குறிப்பிட்டு கணவன் செய்யும் டார்ச்சர், ஓடாகத் தேயும் கணவன்... என ப்ரைம் டைம் மெகா சீரியல் தொனி. 

தங்கமகனை மகளாக்கி, கணவனைக் குடிகாரனாக்கினால்... ஹிட் சீரியலுக்கான கதை ரெடி! எல்லாம் சரி... வழக்கம்போல வெள்ளை நிறத்தில் ஒரு ஸ்மார்ட் பையனை தனுஷுக்கு வில்லனாக்குவது என்ன குறியீடு? `டக்கு பக்கு’ என முதல் பாடலில் அதிரும் அனிருத்கூட செகண்டு ஹாஃபில் அங்கிள் அனிருத் ஆகிவிடுகிறார். இரண்டு மணி நேரப் படம் என்பதை சென்சார் சான்றிதழ் குறிப்பிடுகிறது... ஆனால், நிஜம் நீள்கிறதே!