Breaking News

தமிழ் மக்கள் பேரவையில் இடம்பிடிப்பாரா? வழக்கறிஞர் சிவா பசுபதி

பிரபல வழக்கறிஞர் சிவா பசுபதியை அரசியல் யாப்புக்கான நிபுணர்குழுவில் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நோர்வேயின் சமாதான முயற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபையின் வரைபில் முக்கிய பங்காற்றிய சிவா பசுபதி தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகின்றார். அவரை நிபுணர்குழுவில் சேர்க்க வேண்டும் என்றும் அவருடன் தொடர்பு கொள்வதற்கு எற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பேரவைக்கு நெருக்கமான உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அமரர் ஜே.ஆர் ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தை வரைவதில் பெரும் பங்காற்றியிருந்தார். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வுக்காக அதிகாரப்பரவலாக்கம் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு தனிப்பட்ட முறையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வாதாடியதுடன் அந்த அதிகாரங்களை அந்த சட்டத்தில் இணைப்பதற்கு ஜே.ஆா்.ஜயவா்த்தனாவை இணங்க வைத்தவா் சிவா பசுபதி.

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்த இடைக்கால நிர்வாக சபைக்கான வரைபிலும் காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சி கொண்ட மாநிலம் என்பதையும் அவா் உறுதிப்படுத்தினார்.

ஆகவே 60 ஆண்டுகால அரசியல் போராட்டத்தை நன்கு தெரிந்து கொண்டவர் என்ற அடிப்படையிலும் இலங்கையின் அரசியலமைப்புகளில் உள்ள சட்ட திட்டங்களை நன்கு அறிந்தவர் என்ற வகையிலும் பேரவையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியலமைப்புக் குழுவில் சிவா பசுபதியை இணைத்துக் கொள்வது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பேரவையின் இணைத்தலைவர்களுடன் பேசவுள்ளதாகவும் நிபுணர்குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களும் சிவா பசுபதியை சேர்க்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ள நிபுணர்குழுவில் ஐந்துபேர் புலம்பெயர் நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.